ஐ.நா பிரதிநிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு-

குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் ஆசிய, பசுபிக் பிராந்திய அரசியல் விவகார பணிப்பாளர் மரி யமஷிதா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி சிபினாய் நண்டி மற்றும் ஆலோகர் கிடா ஷபர்வால் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றியுள்ளனர். கடந்த ஆண்டிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் மரி யமஷிதா அவர்களும் குழுவினரும் அமைச்சர் ஹக்கீமை சந்தித்து உரையாடியிருந்தனர்.

மின்சார சபைக்கு புதிய தலைவர், உப தலைவர் நியமனம்-

இலங்கை மின்சார சபையின் தலைவராக அநுர விஜேபாலவும் உப தலைவராக நிஹால் விக்ரமசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் குறித்த துறையில் அதிக அனுபவம் பெற்றவர்கள் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இலங்கை மின்சார சபையில் பல பதவிகளை வகித்துள்ளனர். இதேவேளை 3 வருடங்களுக்கு ஒருமுறை தமக்கு கிடைக்கும் வேதன உயர்வு உரிய வகையில் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி இலங்கை மின்சார சேவையாளர்கள் இன்று இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக எதிர்பார்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், மின்சார சபையின் நிர்வாக அதிகாரியின் கையொப்பமில்லாமல் வேதனம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக இலங்கை மின்சார சேவையாளர்களின் சங்க செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

மேர்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணை செய்ய ஹிருனிகா வலியுறுத்தல்-

தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து பற்றி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர முறைப்பாடொன்றை செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்திலும் அங்கொடை பொலிஸ் நிலையத்திலுமே இவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்துக்கும் ஏனைய முக்கிய சில கொலைகளுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே ஆசிரியர் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கடந்த சனிக்கிழமை முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியிருந்தார். இதனையடுத்தே தனது தந்தையின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி ஹிருணிக்கா முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் இரு சிறுவர்களைக் காணவில்லையென முறைப்பாடு-

தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்தவர்களான அன்ரன் அமலராஜ் (வயது 15) மற்றும் அமலதாஸ் துசாந்தன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர். இவர்கள் நேற்றுமாலை 4.30 மணியளவில் டேவிட் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு மாலை நேர வகுப்பிற்கு சென்றுள்ளனர். வகுப்பு முடிந்தும் இரவு 10மணி ஆகியும் வீட்டிற்கு இரு பிள்ளைகளும் வரவில்லை என பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், இரவு 10 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இருவரின் நிலமை தொடர்பில் இன்றுகாலை பல்வேறு முக்கிய இடங்களில் தேடியபோது, இருவரின் துவிச்சக்கர வண்டிகளும் யாழ். புகையிரத நிலையத்தில் பெற்றோரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வகுப்புக்கு சென்றபோது இவர்களிடம் ஆயிரம்ரூபா பணமிருந்ததாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

பி.எம்.ஐ.சீ.எச் ஆயுத களஞ்சியம் திறப்பு-

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ´ரத்னா லங்கா´ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுத களஞ்சியம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த களஞ்சிய அறையில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் அனுமதி இன்றி ஆயுதம் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சிய அறையில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.