Posted by plotenewseditor on 23 January 2015
Posted in செய்திகள்
பிட்டகோட்டேயில் ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின-
கொழும்பு, பிட்டகோட்டே, சிறிஜயவர்த்தனபுர வாகன விற்பனை நிலையமொன்றில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமானதெனக் கருதும் 53 வாகனங்கள் மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் குறித்த வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமாதென பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 200 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இந்த வாகனங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் சீ.ஐ.டி விசாரணை-
நாட்டின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலன்று இரவு, அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாணை நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பீரிஸ், ‘அலரிமாளிகையில் சம்பவ தினத்தன்று இரவு வேளையை தான் எவ்வாறு களித்தேன் என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குத் தெரிவித்தேன்’ என்று கூறியுள்ளார். அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவுக்கு விரைவில் வாக்குரிமை வழங்க நடவடிக்கை-
முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான வாக்குரிமை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்குவது தொடர்பில் சட்டத்தரணிகளிடம் தான் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தேசப்பிரிய கூறியுள்ளார். இதேவேளை, தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதன் ஊடாக சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடாளுமன்ற பதவியைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு இருக்கின்றதா என ஜயந்த கெட்டகொட எம்.பி, தன்னிடம் எழுத்து மூலமாக கேட்டுள்ளார் என்றும், கெட்டகொட எம்.பி.யின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற சட்ட அனுமதி உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார். Read more