பிட்டகோட்டேயில் ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின-

carsகொழும்பு, பிட்டகோட்டே, சிறிஜயவர்த்தனபுர வாகன விற்பனை நிலையமொன்றில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமானதெனக் கருதும் 53 வாகனங்கள் மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் குறித்த வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமாதென பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 200 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இந்த வாகனங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் சீ.ஐ.டி விசாரணை-

GL peerisநாட்டின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலன்று இரவு, அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாணை நடத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பீரிஸ், ‘அலரிமாளிகையில் சம்பவ தினத்தன்று இரவு வேளையை தான் எவ்வாறு களித்தேன் என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குத் தெரிவித்தேன்’ என்று கூறியுள்ளார். அலரி மாளிகை சதித்திட்டம் தொடர்பில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவுக்கு விரைவில் வாக்குரிமை வழங்க நடவடிக்கை-

sarath fonsekaமுன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான வாக்குரிமை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்குவது தொடர்பில் சட்டத்தரணிகளிடம் தான் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தேசப்பிரிய கூறியுள்ளார். இதேவேளை, தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதன் ஊடாக சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடாளுமன்ற பதவியைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு இருக்கின்றதா என ஜயந்த கெட்டகொட எம்.பி, தன்னிடம் எழுத்து மூலமாக கேட்டுள்ளார் என்றும், கெட்டகொட எம்.பி.யின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற சட்ட அனுமதி உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச-

SLFPஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது காணப்படுகிறார் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 10 தினங்களுக்கு முன்னர் அக்கட்சி தனக்கு அனுப்பிய கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைவர் என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பாவே கட்சியின் செயலாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். குறித்த தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களும் ஏனைய தரப்பினரும் கூறி வருகின்ற போதிலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் விடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஆணையாளர், தனக்கு இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரையில் ஐ.ம.சு.கூ மற்றும் சு.க ஆகிய கட்சிகளின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.ரி.என்., இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தலைவர்கள் நியமனம்-டெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்-

ITNஐ.ரி.என். நிறுவனத் தலைவராக பேராசிரியர் டி.ஜி.திஸாநாயக்கவும் அதன் செயற்பாட்டுப் பணிப்பாளராக தனுஷ்க ராமநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக என். முத்தெட்டுவேகமவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் எஸ். பண்டாரவும், அஷோஷியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டெட்டின்; செயற்பாட்டுப் பணிப்பாளராக எஸ்.வகாராச்சும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிக மூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்தகால அரசின் ஊழல், மோசடிகளை கண்டறிவதில் பாரிய சவால்-

கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்பட்ட வரையரைகளை நீக்கவுள்ளதால் நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை மீண்டும் நாடு திரும்புமாறு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சிறுபான்மை தமிழ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என சர்வதேச ஊடகமொன்றுக்கு அழித்த பேட்டியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் மாற்றத்திற்கான, நல்லிணக்கத்திற்கான தேர்தலாகும். வடக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் கூட்டப்படவுள்ளது. முன்னைய அரசு சீனாவின் அரசாங்கம் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் குறித்து தற்போதைய அமைச்சர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் எல்லை அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பில் நால்வர் விடுதலை-

புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவர் கடந்த 12.11.2014 அன்று இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலர் ஒருவர் உட்பட ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். வழக்கு மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் முற்படுத்தினர். ஏழுபேரில் நால்வர் விசாரணை மூலம் நிரபராதியென தெரியவந்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்பகுதி கிராம அலுவலர் உட்பட ஏனைய மூவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.