Header image alt text

வவுனியாவில் “கறுப்பு வெள்ளை படம்” கவிதை நூல் வெளியீட்டு விழா-

black&whiteவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு மகா வித்தியாலய ஆசிரியர் திருவாளர் ஜெயச்சந்திரன் அபிராம்(கலாரசிகன்) எழுதிய “கறுப்பு வெள்ளை படம்” எனும் கவிதை நூல் இன்று (24.01.2015) மாலை 3.00 மணிக்கு ஆசிரியர் திருமதி கங்கைவேணி தலைமையில் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.கே.சிவஞானம், சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் திரு கே.கே.அருந்தவராஜா, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ந.பார்த்தீபன், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன், வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் திரு ஜெயச்சந்திரன், மன்னார் பெரியமடு மகா வித்தியாலய அதிபர் திரு து.குலதீபன், கலைஞர்கள், நண்பர்கள், கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து வெளியீட்டினை சிறப்பித்தார்கள். இவ் நிகழ்வுக்கான ஆசியுரையினை எழுத்தாளர் திரு கே.கே.அருந்தவராஜா அவர்களும், வெளியீட்டு உரையினை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ந.பார்த்தீபன் அவர்களும், நூல் அறிமுகத்தினை கவிதாஜினி சுகந்தினி அவர்களும் நிகழ்த்தியதுடன், முதல் பிரதியினை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு கே.சிவஞானம் அவர்களிடமிருந்து புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலிற்கான நயப்புரையினை வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் திரு ஜெயச்சந்திரன் நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“கறுப்பு வெள்ளை படம் கவிதை நூல் ஆசிரியரான அபிராம் யார்?
கழகத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவராக விளங்கியவரும், பின் தளத்திலும் பல பொறுப்புக்களை வகித்தவருமான புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் வாசன் (புதுக்கோட்டை வாசன் அல்லது ஒல்லி வாசன் – ஜெயச்சந்திரன்) அவர்களின் மகனாகிய ஜெயச்சந்திரன் அபிராம்; தான் கறுப்பு வெள்ளை படம் கவிதை நூல் ஆசிரியரியராவார்.”

black&white2black&white1 black&white3 black&white4 black&white5 black&white6 black&white7 black&white8 black&white9 black&white10

உப தலைவராக எஸ்.பி திசாநாயக்க நியமனம், அதிபர்களுக்கு கேர்ணல் பதவி தேவையில்லை-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சாடி வந்திருந்தார். மேலும் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையிலேயே எஸ்.பி. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கேர்ணல் பதவியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கேர்ணல் பதவி அதிபர்களுக்கு அவசியமற்றது என்பதினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை-

ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற அரச அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தயாராகியுள்ளன. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு இணைப்பாளர்கள் போன்றோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போது பல்வேறு அரச வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டன. குறிப்பாக அரசாங்க அதிகாரிகள் முன்னாள் அரசாங்கத்தின் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வாறானவர்கள அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இணங்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த தேர்தலில் அவ்வாறான அதிகாரிகளை அரச கருமங்களில் ஈடுபடுத்தாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவென்காட் நிறுவன பிரதானி வெளிநாடு செல்வதற்கு தடை-

அவென்காட் பாதுகாப்பு நிறுவன பிரதானி நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். அண்மையில் காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. குறித்த ஆயுதக் களஞ்சியசாலை கடற்பயணத்தின் போது, ஆபத்துக்கள் ஏதும் ஏற்படின் அவசரத் தேவைக்காக வழங்க பயன்படுத்தப்படுபவை எனவும், இது அவென்காட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானவை எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காலி துறைமுகத்தில் காணப்படும் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், குறித்த நிறுவன பிரதானி நாட்டிலிருந்து வெளியேறினால் விசாரணைகளுக்கு தடங்கள் ஏற்படக்கூடுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமான சேவைகள் தலைவராக அஜித் டயஸ்-

இலங்கை விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்தப் பதவியில் முன்னாள் ஜனாதிபதியின் மைத்துனர் நிசாந்த விக்ரமசிங்க கடமையாற்றி வந்தார். நிசாந்த விக்ரமசிங்க பதவி விலக்கப்பட்டு அவரது இடத்திற்கே அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் டயஸ் கொழும்பில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்களின் இயக்குநராகவும், பிரித்தானியாவின் ஆடையுற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகள் 29பேருக்கு அழைப்பு-

அரசியல் பிரமுகர்களின் செல்வாக்குமூலம் நியமனம் பெற்ற இராஜதந்திரிகள் 29பேரை உடனடியாக நாட்டுக்கு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகளை நாட்டுக்கு அழைக்கும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இது, அரசாங்கம் மாறும்போது இடம்பெறும் வழக்கமான நிகழ்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் செல்வாக்கு மூலம் நியமிக்கப்பட்ட மற்றும் ஒரே நிலையத்தில் நீண்டகாலமாக கடமையாற்றும் இராஜதந்திரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

பிரதம நீதியரசரை விசாரணை செய்தமை ஆரோக்கியமான முன்னுதாரணம்-

பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டமையானது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான முன்னுதாரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நீதி அனைவருக்கும் சமம் என புலப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் ஒருநாள் செலவு 8000 ஆயிரம் ரூபாய் மாத்திரமே-

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளாந்தம் 2850 ரூபா முதல் 8000 ரூபா வரைதான் செலவு செய்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது ஒருநாள் செலவு 2 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்கா மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் பிரதி செயலாளர்களாக டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தின்போதே நியமனம் வழங்கப்பட்டுள்ளன.