தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய சகலருக்குமெதிராக நடவடிக்கை-ஜனாதிபதி-

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொடயில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். எந்தவொரு அரசாங்கமும் வழங்காத நிவாரணத்தை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட எவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவேன். நாட்டில் இவ்வாறு இடம்பெற அனுமதிக்க முடியாது. நாடு அபிவிருத்தி அடைவது என்பது வீதிகளும் கட்டடங்களும் நிர்மாணிக்கப்படுவதல்ல. பௌதீக வளங்கள் அபிவிருத்தி அடையும் போது அதற்கு ஏற்றவாறு மக்களின் ஆன்மிகமும் வளர்ச்சியடைய வேண்டும். மக்களின் மனங்கள் மேம்பட வேண்டும். ஆகவே புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது எளிதான விடயமல்ல நாம் துட்டகைமுனுவோ தேவநம்பியதிஸ்ஸவோ அல்ல. நான் மன்னரும் அல்ல. நாம் மகா விஜயபாகு மன்னனோ மகா பராக்கிரமபாகு மன்னனோ அல்ல. நான் உண்மையாகவே ஜனநாயக நாட்டின் சாதாரண மக்கள் சேவகன் என்பதை தெளிவாக கூறுகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால மேலும் தெரிவித்துள்ளார்.

மீரியபெத்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்-

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசலையின் கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பாடசாலையின் ஒரு மண்டபத்தில் இவர்கள் தங்கியிருந்த நிலையில், பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீரியபெத்த மண் சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த சுமார் 25 குடும்பங்களை சேர்ந்த 65பேர் தொடர்ந்தும் ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் துணைவியார் மீதும் முறைப்பாடு-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் உதவி காவல்துறை அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் மனைவியே இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திறைசேரியினால் 500 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது கணவரான வாஸ் குணவர்த்தன விசாரணைகளை மேற்கொண்டார் இதன்போது இந்த விற்பனையில் சிராந்தி ராஜபக்ச தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்போது உதவி காவல்துறை அதிபர் அனுர சேனாநாயக்க, விசாரiணையை நிறுத்துமாறு உத்தரவிட்டார் அத்துடன் இந்த விடயம் பொய்யானது என்று கூறி ஊடகங்களுக்கு கருத்துரைக்குமாறும் தமது கணவரிடம் கோரப்பட்டது. எனினும் அதனை மேற்கொள்ளாத நிலையிலேயே தமது கணவரும் மகனும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக வாஸ் குணவர்த்தனவின் மனைவியான சாமலி தெரிவித்துள்ளார்

மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு முடக்கம்- போக்குவரத்து பணிப்பாளருக்கு தடை-

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீடடு முடக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழங்கிய பணிப்பின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே மீது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பணிப்பாளராக பணியாற்றிய கீர்த்தி சமரசிங்க, வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியின் பதவி காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாக குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24ம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும்-அமைச்சர் கரு ஜயசூரிய-

எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம் மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.