வட, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்-
ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக் கடிதங்ளைப் பெற்றுக் கொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆளுநர்களின் விபரம் வருமாறு,
01. எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார – வட மாகாண ஆளுநர்
02. ஒஸ்டின் பெனாண்டோ – கிழக்கு மாகாண ஆளுநர்
03. பி.எம்.ஏ.ஆர்.பெரேரா – சப்ரகமுவ
04. சுரங்கனி எல்லாவல – மத்திய மாகாண ஆளுநர்
05. பீ.பி.திஸாநாயக்க – வட மத்திய மாகாண ஆளுநர்
06. சட்டத்தரணி எம்.பி.ஜயசிங்க – ஊவா மாகாண ஆளுநர்
வேலையில்லாப் பட்டதாரிகள் கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கிண்ணியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் தங்களையும் உள்வாங்கி உடனடியாக நியமனம் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள், கிண்ணியா நகர சபையில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு ஊர்வலமாக சென்றிருந்தனர். பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பிரதேச செயலாளரிடம் பட்டதாரிகள் வழங்கியதுடன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.மஹ்ரூப்பினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளராக நியமனம்-
சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இதற்கான நியமனக் கடிதத்தைக் கையளித்துள்ளார். இப்பாகமுவ மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க, ஊடகத்துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அனுபவமுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளராவார். ஊடகவியலாளர், செய்தி தயாரிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக ஊடகத்துறையில் தமக்கென ஓரிடத்தைப் பிடித்திருந்த அவர், நியூஸ்பெஸ்ட் (சக்தி எவ்.எம்) ஊடகத்தின் செய்திப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகளிலும் செய்தி சேகரிப்பில் அனுபவமுள்ள தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க, சர்வதேச மட்டத்திலான பயிற்சிகளையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடமேல் மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் கைது-
வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஆனமடுவ ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஆடிகம – கரநாயக்கம ஐதேக அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் த. மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் நிறுத்தம்-
யாழ்ப்பாணத்தில் குடிநீரில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சுமத்தப்பட்ட சுன்னாகம் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிவான் சதீஸ்கரன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் நிலத்துக்குள் துழையிட்டு செலுத்தப்படுவதால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து உணவுத் தவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையில் இருந்து விலக யோசித்த ராஜபக்ஷவுக்கு அனுமதி இல்லை-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ கடற்படையில் இருந்து இராஜினாமா செய்ய சமர்பித்த விலகல் கடிதத்தை கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் ஜயந்த பெரேரா நிராகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது 9ம் திகதி யோசித்த ராஜபக்ஷ தனது விலகல் கடித்தை சமர்பித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யோசித்த ராஜபக்ஷ கடற்படையில் சேர்ந்த விதம், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற விதம், கடமையில் இருந்தபோது அரசியல் செய்த விதம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி நேற்று பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குமார் குணரட்ணத்திடம் வாக்குமூலம் பெற முஸ்தீபு-
முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் இலங்கைக்கு திரும்பியதன் பின்னர்; மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு விரும்புவதாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பன்னிப்பிட்டியவிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு விஜயம் மேற்கொண்ட குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குமார் குணரட்ணத்திடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததாக, கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொடி தெரிவித்துள்ளார். இதன்போது, கட்சியின் தலைவர் அலுவலகத்தில் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்தவின் கணக்கு விவரங்களை திரட்ட அனுமதி-
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் கணக்கு விவரங்களை திரட்டுவதற்காக, அனைத்து நிதி நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்துள்ளார்.
கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டுவதை நிறுத்துமாறு உத்தரவு-
யாழ்ப்பாணம், வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிகளில் யாழ் மாநகரசபையோ ஏனைய உள்ளுராட்சி சபைகளோ கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 27.01.2015ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உடன் நடைமுறைப்படுத்துமாறும் இதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார். எமது நிர்வாக எல்லைக்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை 22.01.2015ஆம் திகதிமுதல் எமது பிரதேச சபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டுவதற்கு யாழ் மாநகரசபை தடைவிதிக்கப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட குழப்பநிலையினை தீர்க்கும் முகமாக 26.01.2015ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சி.மகேந்திரன் மற்றும் சபையின் கௌரவ உறுப்பினர்கள் பொறுப்பான உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான ஓர் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது. இதன்மூலம் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பின் திங்கட்கிழமை மாலை கழிவுகள் மீளக் கொட்டப்பட்டது. இது தொடர்பாகவும் கல்லுண்டாய் வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் சூழல் மாசடைவு மற்றும் நோய்த் தொற்றுக்கள் குறித்தும் 19.01.2015ஆம் திகதி முதலமைச்சர் சி;.வி;.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற டெங்கு கூட்டத்தில் வலி தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளரால் பகிரங்க வேண்டுகோள் விடப்பட்டது. யாழ் மாவட்டம் டெங்கு தொற்றில் இரண்டாம் நிலையில் உள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கைப்படி இப்பகுதி மக்கள் விரைவில் வாய், குதவழி நோய்கள், புற்றுநோய், சுவாசநோய் (அஸ்மா), தோல் வியாதிகள் போன்றவற்றால் பாதிக்கப்புள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தரப்பட்டுள்ளன. தற்போது எமது நிர்வாக எல்லைக்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் நவாலி ஆனைக்கோட்டை பிரதேச மக்கள் மேற்படி ஆபத்தான திண்மக்கழிவுகளாலும் எரியூட்டப்படும் புகை மூட்டங்களாலும் நிலத்தடி நீர் தொற்று மழை வெள்ளம் மூலம் காவு நோய்கள் போன்ற ஆபத்தான நோய்களுக்கு முகம் கொடுத்து வருவதால் பிரதேச மக்களின் நீண்ட கால நலன்கருதி வலி தென் மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் அனுமதியின்றி சபை எல்லைக்குள் வெளியிடத்து திண்மக் கழிவுகள் கொட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தவிசாளரின் அனுமதியின்றி சபை எல்லைக்குள் கழிவு தாங்கி வாகனங்கள் உள் நுழையக்கூடாது என்றும் பொருத்தமான தொழில் நுணுக்க பொறிமுறை இன்றியும் தவிசாளர் அனுமதி இன்றியும் கல்லுண்டாய் வெளியில் ஆபத்தான கழிவுகளைக் கொட்டக்கூடாது என்றும் தவிசாளர் அறிக்கை விடுத்துள்ளார். தவறும் பட்சத்தில் உடன் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவிசாளர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.