Header image alt text

ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக செயற்படுவதாக அறிவிப்பு-

siraniஇலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் 43வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக இருக்க காணப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவர் மீண்டும் பிரதம நீதியரசராக செயற்படுவதாகவும் நாளை ஓய்வு பெறுவார் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவன் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்க மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று 28ம் திகதி தொடர்ந்தும் கடமையை பொறுப்பேற்கலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதனடிப்படையிலேயே அவர் இன்று நீதிமன்றம் சென்று கடமைகளை பொறுப்பேற்றதாகவும் அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.

சரத் பொன்சேகாவின் பதவி, பட்டம் அனைத்தும் திருப்பியளிப்பு-

sarath fonsekaசரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள், பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல் உள்ளிட்ட பட்டங்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்த தகவலை உறுதி செய்துள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதுடன் தேர்தல் தோல்வியின் பின் அவர் கைது செய்யப்பட்டார். வெள்ளைக் கொடி வழக்கு, ஹைகொப் வழக்கு போன்றவற்றில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார். மேலும் அவரது பதவி, பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. இந்நிலையில் சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த நிலையில் சரத் பொன்சேகா இழந்த அனைத்தும் இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

காணாமற் போனோர் கடத்தப்பட்டோர் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்-

கடந்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விரிசான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற, முன்னிலை சோசலிச கட்சி இரகசிய காவற்துறையினரிடம் முறைபாடு செய்துள்ளது. அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போகச் செய்தல் கடத்தல் மற்றும் வெள்ளைவானின் மூலமான கடத்தல்கள் போன்ற பல சம்பவங்கள் கடந்த காலங்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்த விசாரணைகள் கடந்த காலத்தில் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே அது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்து அநீதிகளுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2011ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2012ம் ஆண்டு ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 75 பேர் கடத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள் எம்மிடம் இருக்கின்றன. புதிய அரசாங்கத்துக்கு இவ்வாறான சம்பவங்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்கான பொறுப்பு காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரணில் – மைத்திரி உடன்படிக்கை கைச்சாத்தானது உண்மையல்ல

maithri & ranilஜனாதிபதி தேர்தல் காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கைச்சாத்தானதாக கூறப்படும் உடன்படிக்கை தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததன் பின்னர் இந்த கருத்து வெளியிடப்பட்டது. எனினும். அது தொடர்பான ஆவணங்களில் எந்தவித உண்மையும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. காவல்துறை மா அதிபரிடம் முறையிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை தற்போது இறுதி செய்துள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை. ஜனாதிபதி தேர்தல் தினத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சூழ்ச்சி தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, கடந்த காலங்களில் காவல்துறை திணைக்களத்தினுள் இடம்பெற்ற ஏதேட்சையான இடமாற்றங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் பெற நாளை வருமாறு அழைப்பு-

jvpமுன்னணி சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கை திரும்பியதன் பின்னர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, வாக்குமூலம் கொடுப்பதற்கு அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு இன்று சென்றுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக எனது செயற்பாடுகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். மேலும் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை திணைக்களத்துக்கு வருமாறும் தெரிவித்தனர். அது மட்டுமன்றி எனது குடியுரிமை பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகளை நடத்தினார்கள் என்றார். பன்னிப்பிட்டியவிலுள்ள முன்னணி சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குமார் குணரட்ணத்திடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக திங்களன்று சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் சரத் பொன்சேக்கா பொதுத் தேர்தலில் தனித்து போட்டி-

sarath kadsiஅடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தலின் பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 98,800க்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தனக்கு அங்கீகாரம் வழங்கியிருந்ததாக இதன்போது பொன்சேகா நினைவுகூர்ந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆட்சியிலிருந்த ஊழல்மிகு அரசாங்கம் தனது வாக்குகளை திருடியதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் குற்றஞ்சாட்டினார். மக்கள் தற்போது தனக்கு வழங்கி வருகின்ற ஆதரவை அவதானிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இரட்டிப்பான வாக்குகளை பெற்று வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலகுமாறு வலியுறுத்தி புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சட்டத்தரணிகள் சிலரும், குடியியல் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரதம நீதியரசர் மோசடியான வகையில் நீதிமன்ற கட்டமைப்பிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடதுசாரி கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு-

இடதுசாரி கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர். லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிச கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். மேலும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது குறித்து தமது கட்சியில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் தொடர்பில் இடதுசாரி கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் இலங்கை வருகிறார்-

பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி இன்று (28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் எதிர்வரும் 30ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பதோடு, யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. ஹ_கோ ஸ்வைரி இலங்கைக்கு விஜயம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.

கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டுவதை நிறுத்துமாறு உத்தரவு– Photos⇓

kallundaai 1யாழ்ப்பாணம், வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிகளில் யாழ் மாநகரசபையோ ஏனைய உள்ளுராட்சி சபைகளோ கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 27.01.2015ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உடன் நடைமுறைப்படுத்துமாறும் இதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார். எமது நிர்வாக எல்லைக்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை 22.01.2015ஆம் திகதிமுதல் எமது பிரதேச சபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டுவதற்கு யாழ் மாநகரசபை தடைவிதிக்கப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட குழப்பநிலையினை தீர்க்கும் முகமாக 26.01.2015ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சி.மகேந்திரன் மற்றும் சபையின் கௌரவ உறுப்பினர்கள் பொறுப்பான உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான ஓர் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது.  Read more