கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டுவதை நிறுத்துமாறு உத்தரவு– Photos⇓
யாழ்ப்பாணம், வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிகளில் யாழ் மாநகரசபையோ ஏனைய உள்ளுராட்சி சபைகளோ கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 27.01.2015ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உடன் நடைமுறைப்படுத்துமாறும் இதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார். எமது நிர்வாக எல்லைக்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை 22.01.2015ஆம் திகதிமுதல் எமது பிரதேச சபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டுவதற்கு யாழ் மாநகரசபை தடைவிதிக்கப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட குழப்பநிலையினை தீர்க்கும் முகமாக 26.01.2015ஆம் திகதி திங்கட்கிழமை கௌரவ மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சி.மகேந்திரன் மற்றும் சபையின் கௌரவ உறுப்பினர்கள் பொறுப்பான உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான ஓர் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது.
இதன்மூலம் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பின் திங்கட்கிழமை மாலை கழிவுகள் மீளக் கொட்டப்பட்டது. இது தொடர்பாகவும் கல்லுண்டாய் வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் சூழல் மாசடைவு மற்றும் நோய்த் தொற்றுக்கள் குறித்தும் 19.01.2015ஆம் திகதி முதலமைச்சர் சி;.வி;.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற டெங்கு கூட்டத்தில் வலி தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளரால் பகிரங்க வேண்டுகோள் விடப்பட்டது. யாழ் மாவட்டம் டெங்கு தொற்றில் இரண்டாம் நிலையில் உள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கைப்படி இப்பகுதி மக்கள் விரைவில் வாய், குதவழி நோய்கள், புற்றுநோய், சுவாசநோய் (அஸ்மா), தோல் வியாதிகள் போன்றவற்றால் பாதிக்கப்புள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தரப்பட்டுள்ளன. தற்போது எமது நிர்வாக எல்லைக்குட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் நவாலி ஆனைக்கோட்டை பிரதேச மக்கள் மேற்படி ஆபத்தான திண்மக்கழிவுகளாலும் எரியூட்டப்படும் புகை மூட்டங்களாலும் நிலத்தடி நீர் தொற்று மழை வெள்ளம் மூலம் காவு நோய்கள் போன்ற ஆபத்தான நோய்களுக்கு முகம் கொடுத்து வருவதால் பிரதேச மக்களின் நீண்ட கால நலன்கருதி வலி தென் மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் அனுமதியின்றி சபை எல்லைக்குள் வெளியிடத்து திண்மக் கழிவுகள் கொட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. தவிசாளரின் அனுமதியின்றி சபை எல்லைக்குள் கழிவு தாங்கி வாகனங்கள் உள் நுழையக்கூடாது என்றும் பொருத்தமான தொழில் நுணுக்க பொறிமுறை இன்றியும் தவிசாளர் அனுமதி இன்றியும் கல்லுண்டாய் வெளியில் ஆபத்தான கழிவுகளைக் கொட்டக்கூடாது என்றும் தவிசாளர் அறிக்கை விடுத்துள்ளார். தவறும் பட்சத்தில் உடன் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவிசாளர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.