இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை-

europ1ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் சில மாதங்களில் நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். மீன்பிடித்தல் தொடர்பான சர்வதேச சட்டங்கள் சரியாக பின்பற்றப்படாததன் காரணமாக, கடந்த வருடம் விதிக்கப்பட்டிருந்த இந்த தடை, இந்த மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனை நீக்கிக் கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதனடிப்படையில் சர்வதேச சட்டங்களை பாதுகாப்பது தொடர்பில் அவரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் சில மாதங்களில் இந்த உறுதிமொழிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்று ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யும். அதனடிப்படையில் இந்த தடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

uk group jaffnaஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ{கோ ஸ்வைர் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். யாழில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்ததுடன், யாழ் ஊடக அமையப் பிரதிநிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். வடமாகாண முதலமைச்சரை சந்தித்த ஹ{கோ ஸ்வைர், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், புதிய அரசாங்கத்துடனான உறவு குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், ஆட்சி மாற்றத்தின் பின்னராக ஊடகவியலாளர்களின் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கைக்கு விஜயம்-

nisa piswalஅமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் நிஷா தேஸாய் பீஸ்வால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளிநாட்டு அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அவர் தமது இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை குறித்து அவரது விஜயத்தின் போது முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு-

ilankai india meenavar pechchuஇந்திய மற்றும் இலங்கை கடல் எல்லை பிரதேசங்களிலேயே அந்தந்த நாடுகளின் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட செய்வதன் ஊடாகவே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுகின்ற மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்துறை நிலையியல் குழுவின் தலைவர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் குறித்து வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் பேச்சுவார்த்தை இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. தொடர்சியாக இரண்டு நாட்டு மீனவர்களும் சந்திக்கின்ற பிரச்சினைகள் குறித்து குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒருமுறையேனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய நீதிமன்ற தீர்ப்புக்கு சட்டத்தரணிகள் கண்டனம்-

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகள் நடுக் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்ட ரீதியானதே என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் வழங்கி இருந்து தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அகதிகள் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற 157 இலங்கை அகதிகள், ஒருமாத காலப்பகுதி வரையில் கடலில் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டமை சட்ட முறையற்ற செயல் என்று தெரிவித்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருந்தது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திட்டங்களுக்கும், அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு சட்டத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரித்திருப்பதாக, சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழக அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாமென தமிழக முதல்வர் கோரிக்கை-

-panneerselvamதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது 1983ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் இருந்து 3 லட்சத்து 4 ஆயிரத்து 259 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரையில் நாடு திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 இல்ஙகை அகதிகள் வசிப்பதுடன், 64 ஆயிரத்து 924 பேர் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அகதிகளை இலக்கைக்கு அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும் வரையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தமிழக முதல்வர் கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கால பிரசார பொருட்கள் மீட்பு-

ஜனாதிபதி தேர்தலின் போது, விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, 75 ஆயிரம் திவிநெகும உறுதி பத்திரங்கள்; மற்றும் 65 ஆயிரம் பஞ்சாங்க நாட்காட்டிகள் என்பன அம்பாறை மாவட்ட செயலக களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை காவற்துறையினரால் இவை நேற்று மீட்கப்பட்டன. ஜே.வீ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ முன்வைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த உறுதி பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில், அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸிடம் காவற்துறையினர் விசாரணை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி, ஜனவரி 2ஆம் திகதி மாவட்ட செயலக சமூர்தி முகாமைத்துவத்திற்கு கிடைக்க பெற்ற இந்த ஆவணங்களை, ஜனாதிபதி தேர்தல் காரணமாக விநியோகிக்க வேண்டாம் தாம் ஆலோசனை வழங்கியதாக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

குமார் குணரத்தினத்திடம் விளக்கம் கோரல்-

சுற்றுலா வீசா மூலம் நாட்டிற்கு வந்து, அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது எவ்வாறு என, முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விளக்கம் கோரியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் நேற்று அங்கு சென்றிருந்தார். இதன்போது இந்த விளக்கம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், விசாரணைக்காக மீண்டும் வருகைதருமாறு தமக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக முன்னணி சோஷலிச கட்சியின் குமார் குணரத்னம் மேலும் கூறியுள்ளார்.

பாலித்த எம்.பி.க்கு விளக்கமறியல், ஜயசிங்க பண்டார எம்.பியாக நியமனம்-

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவின் விளக்கமறியல் பெப்ரவரி 2ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழதாளிடவைத்து துன்புறுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது இவ்விதமிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட ஜயசிங்க பண்டார, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.