நல்லாட்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – மைத்திரி-

janathipathiஇலங்கையில் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதி மேன்மை தாங்கிய, மேதகு, அதி வணக்கத்திற்குரிய, கௌரவ ஜனாதிபதி என்ற மிகைப்படுத்திய பதங்களால் தன்னை அழைக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரியுள்ளார். இவ்வாறான விசேட சொற்பதங்களைக் கொண்டு தன்னை அழைக்கக் கூடாது என்பது பற்றி அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனது துணைவியை ஜனாதிபதியின் பாரியார் என்றெல்லாம் அழைக்க வேண்டாம் என அவர் கோரியுள்ளார். தேசிய தொலைக்காட்சியில் ஜனாதிபதி பங்கேற்ற முதலாவது நேர் காணல் நிகழ்ச்சியின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த அரசாங்கத்தை தோற்கடிக்க இளைஞர் யுவதிகள் முக்கியமான ஒத்துழைப்பை வழங்கினர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கினர். மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் எதிர்பார்ப்புடன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும். 100 நாள் திட்டத்தை முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல. அதீதிதமான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், நாடாளுமன்றின் ஒத்துழைப்பின்றி 100நாள் திட்டத்தை அமுல்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தீர்மானம்-

parlimentபாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்தியமைக்கும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இம்மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல் சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு ஆகிய முக்கிய ஆலோசனைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்படவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் பதவிக்காலத்தை 4 ஆண்டுகளாக குறைத்தல் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறல் ஜனாதிபதி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோரை மீட்டுத்தரக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்-

காணாமல் போனோரை மீட்டுத்தருமாறு கோரி நாளை 2ஆம் திகதி காலை கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. கடந்த வன்னி யுத்தத்திலும் ஏனைய வழிகளிலும் காணாமல் போனோரின் எண்ணிக்கை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது. இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசு முன்னெடுக்காத நிலையில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோர் அமைப்பு இப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஏனைய முக்கியஸ்தர்கள் பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் இக் கவனயீர்ப்பு போராட்டமானது ஏ9 வீதியிலுள்ள பழைய கச்சேரி முன்றலில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்கென தனி விமானம் வேண்டாம்-ஜனாதிபதி-

maithripala3ஜனாதிபதி மட்டும் பயன்படுத்தும் உத்தியோகபூர்வமான விமானம் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 16 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208 கோடி ரூபாவாகும். இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அந்த விமானக் கொள்வனவை நிறுத்தியதுடன் அந்த பணத்தை மக்களின் நலன்புரிகளுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் சொகுசு வாகனத்துடன் கைது-

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் தேப்பட்டு வந்த ஒருவர் சொகுசு வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு, நாராஹேன்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். களனியைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்து கூரிய ஆயுதங்கள். வெளிநாட்டு தயாரிப்பிலான விரிவுபடுத்தக்கூடிய இரும்பு தடிகள் மீட்கப்பட்டுள்ளன.

கொலன்னாவை எரிபொருள் குழாயில் கசிவு-

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. ஒருகொடவத்தை கம்பி கொட்டுவ பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் ரொஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கசிவாகும் எண்ணையை பவுசர் மூலம் சேகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த குழாயினூடாக விமானத்திற்கு பயன்படுத்தக்கூடிய எரிபொருளை கொண்டு செல்லும் போதே கசிவு ஏற்பட்டதாகவும், எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய செயலாளர் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

pothunalavayaநாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுபிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்போது தற்போதைய அரசின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் மங்கள சமரவீரவால், கமலேஷ் சர்மாவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நபர்களைச் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமான சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இராஜினாமா-

faiser mustafaவிமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இன்றுபகல் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. எதுஎவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக பைசர் முஸ்தபா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.