வடக்கு ஆளுநர், செயலாளர் பதவியேற்பு-
வட மாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் தமது பொறுப்புக்களை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டனர். வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றுகாலை 9.20 மணியளவில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண அமைச்சர்கள் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் பொறுப்புக்களை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேவேளை வடமாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட ஏ. பத்திநாதன் தனது பொறுப்புக்களை திருநெல்வேலியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
திஸ்ஸ அத்தநாயக்க கைது-
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க இன்று இரகசிய பொலிஸாரால் வாக்குமூலம் பெற்றபின் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இதன்போது சந்தேகநபரான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை-
பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேச சபை தலைவர் தியாகரட்ன அல்விஸ்மீது பிரதேச சபை மாதாந்த கூட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தொடர்பு இருப்பதாகவும் அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பிற்பகல் பாராளுமன்றம் கூடியபோதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாலித்த தெவரப்பெரும எம்.பி.க்கு விளக்கமறியல் நீடிப்பு-
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவின் விளக்கமறியல் பெப்ரவரி 8ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை முழதாளிடவைத்து துன்புறுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவரை இன்று 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கடந்த 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதியமைச்சரின் கடவுச்சீட்டை முடக்க உத்தரவு-
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர், கடந்த 2006ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 107 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு அவ்வாணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைக்கு இணங்கவே கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் அவரது கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது.
பலப்பிட்டிய பிரதேச சபை தலைவர் கைது-
பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்துசெய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.