இலங்கையின் நிர்வாகம் தொடர்பில் ஒபாமா மகிழ்ச்சி-

nisha_biswal.இலங்கையின் புதிய நிர்வாகம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட அந்த நாட்டு அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிஷா பிஸ்வால் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடை நிலைமைகள் குறித்து அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தியதாக பிஸ்வால் இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனநாயக வழியிலான புதிய நிர்வாகம் இலங்கையில் ஏற்படுத்த முடிந்துள்ளமை தொடர்பில் அமெரிக்க மகிழ்ச்சி கொள்வதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவினை மிகவும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுச் செல்ல உரிய நிலமைகளை ஏற்படுத்த முடியும் என கூறியுள்ளார். இதனிடையே, நிஷா பிஸ்வால் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்தும் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு-

nisha TNA metதெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வாலுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழருக்கு முன்னுரிமை வழங்கவில்லை. மேலும் தற்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் 25 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என கூட்டமைப்பு அமெரிக்கா நிஸா பிஸ்வாலிடம் எடுத்துக் கூறியுள்ளது. அத்துடன் எமக்கு நிறந்த தீர்வொன்றை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆனால் 25 நாட்கள் கடந்தும் இன்னும் எங்களை கண்டுகொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கண்டறியவே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. மீள்குடியேற்றம், காணி அபகரிப்பு, காணாமல் போனோர் தொடர்பான விடயம், அரசியல் கைதிகள் மற்றும் இராணுவத்தினர் விலக்கிகொள்ளல் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூட்டமைப்பு, நிஸா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளது. இதேவேளை இனப்பிரச்சினை தீர்வு உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க குழு ஒன்றை அமைக்க புதிய அரசாங்கம் இணங்கியுள்ளதென நிஷா பிஸ்வால் இதன்போது கூட்டமைப்பினரிடம் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு-

muslim congressஅமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று மதியம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மு.கா. செயலாளரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, பிரதிச் செயலாளரும், கல்முனை முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரான நாட்டு நிலைமைகள் குறித்து அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட மு.கா. பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். அதேவேளை நல்லாட்சிக்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் ஹக்கீமின் வேண்டுதலின் பேரில் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகம் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கு விளக்கிக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நிஷா பிஸ்வால், இத்திட்டங்கள் நாட்டு மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் இலங்கையின் நல்லாட்சிக்கும் பொதுநல விடயங்களுக்கும் அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸ அத்திநாயக்கவை வெலிக்கடையில் எம்.பிக்கள் பார்வை-

tissa welikadayilவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழுவினரே அவரை பார்வையிட்டதுடன் நலன்விசாரித்துள்ளனர். எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் செனவிரத்ன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, லக்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் லலித் திஸாநாயக்க ஆகியோரே அவரை பார்வையிட்டுள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐ.தே. கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்ட பொருட்கள் குறித்து விசாரணை-

முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்தே கண்டி, புஸ்பதான மாவத்தையில் உள்ள அவரது வீட்டிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, கறுவாத்தோட்டம், கெப்பட்டிபொல மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து மூன்று லொறிகளில் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டு கண்டியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அந்த பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பொருட்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் அவரது படம் தாங்கிய கோப்பைகளும் இருந்தன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள, ஜோன் கெரியை சந்திக்க உள்ளார்-

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார். அதன்போது அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போதே இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ய ஏற்பாடு-

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1987ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றமை இதுவே முதல்தடவையாகும்.

யாழில் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து-

யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக கடப்பதற்கு முற்பட்ட உழவு இயந்திரத்தை இன்றுகாலை ரயில் மோதியததால், உழவு இயந்திரம் தூக்கி எறியப்பட்டதுடன், அங்கிருந்த கடையொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திர சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம், புகையிரதம் வருவதற்கான சமிக்ஞை ஒலியையும் மீறி கடவையை கடக்க முற்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தின் பெட்டி தூக்கி எறியப்பட்டதால் மேற்படி கடைமீது விழுந்து கடைக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.