பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும்-ஜனாதிபதி-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு – தெற்கு மக்களின் மனங்களை ஒன்றுபடுத்தி வாழக்கூடிய தருணம் ஏற்படும் என நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், வரலாற்று தவறுகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்தும் தீவிரவாதிகளிடம் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போராடி உயிர்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி மற்றும் கௌரவம் செலுத்துகின்றோம். நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து தீர்வு பெற வேண்டும். நாட்டின் அனைத்து தரப்பு மக்களிடையே ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு மோடி மும்மொழிகளில் வாழ்த்து-
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதில் விசேட அம்சம் என்னவென்றால், இந்திய பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் வாழ்த்து தெரிவித்துள்ளமையாகும். பிரதமர் மோடி தனது டுவிட்டார் தலத்தில், ´இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிறிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்´ என்று கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு முன்னோக்கி செல்ல தாம் வாழ்த்து தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் புதிய தலைவரின் நிர்வாகத்திலும் இந்தியா அதனை மேலும் வலுவானதாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சிறப்பு தூதுவர் இலங்கைக்கு விஜயம்-
புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம், கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையிலேயே இலங்கையுடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், தனது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து பேச்சு நடத்தவுமே, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் இங்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரயில் கெப் மோதியதில் நால்வர் பலி- சுதந்திர தினத்தில் 557கைதிகள் விடுதலை-
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயில் மீது வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் பிரதான பாதை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ராகம – பட்டுவத்த பகுதியில் ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 557 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும், அபராதம் செலுத்த முடியாதிருந்த கைதிகளுமே ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளனர்.
பிரான்ஸ் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமான சேவை விமானமொன்று ஈரானின் தெஹரான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக யு.எல்.563 என்ற விமானம் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் விமானம் மீண்டும் பிரான்ஸ் நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாதான சூழல் உருவாகுமென பிரித்தானியா நம்பிக்கை-
இலங்கையில் சமாதானமான சூழல் உருவாகும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு முதலில் அந்த நாட்டிற்கு நல்ல தலைவர் தேவைப்படுகின்றார். அத்தகைய நல்ல தலைவர் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றார். அவருடைய ஆட்சியில் இலங்கையில் சமாதானமான ஒரு சூழல் உருவாகும் என பிரித்தானியாவின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பான லோட் நசெபி சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டுச்சபையின் தலைவராக உபுல் நியமனம்-
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய, முதலீட்டுச்சபை தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டுச்சபையின் தலைவராக கடமையாற்றிய கலாநிதி லக்ஷ்மன் ஜயவீர, அப்பதவியை இராஜினாமா செய்துகொண்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
தைவானில் விமானம் ஆற்றில் வீழ்ந்ததில் 16 பேர் பலி
தைவானில் 53 பேருடன் சென்ற பயணிகள் விமானம் நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தைவானில் தலைநகர் தைபே விமான நிலையத்திலிருந்து இன்றுகாலை 53 பேருடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா யுவுசு 72-600 பயணிகள் விமானம், கின்மென் தீவைத் தாண்டி செல்லும்போது பாலம்மீது மோதி விபத்துக்குள்ளாகி கீலுங் என்ற ஆற்றில் வீழ்ந்துள்ளது. சரியாக 10.55மணிக்கு விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.