முன்னாள் புலி உறுப்பினர் கைது-
கடத்தப்பட்ட வேன் ஒன்றினை போலியான முறையில் இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் புலிகள் இயக்க (புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்) உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். யாழ் மானிப்பயை சேர்ந்த குலேநதிரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேகநபர் 56-5647 என்ற வேனைக்கடத்தி அதன் எஞ்ஜின் இலக்கம் மற்றும் வர்ணத்தையும் மாற்றி காத்தான்குடிக்கு எடுத்துவந்து வர்த்தகர் ஒருவருக்கு விற்க முயன்றுள்ளார். குறித்த வேன் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின்கேரில் விசேட பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து குறித்த நபரும் வாகனமும் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெரத தெரிவித்துள்ளார்.
2,200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை, மாவட்டச் செயலர்களுக்கும் இடமாற்றம்–
முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 2,200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 1,800 பேருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க நாடு முழுவதிலும் கடமையாற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன் புதிய தபால்மா அதிபராக டீ.எல்.பீ.ஆர். அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணாவில்லை-
மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் படகு கவிழ்ந்ததன் காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 6.30 மணியளவில் மூன்று பேர் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததன் காரணமாக மூன்று பேரில் இருவர் தப்பியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மட்டக்களப்பு கறுவப்பங்கேணியை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் விஜயகுமார் (40வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை-
கடந்த கால யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 பேரில் சிறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக, மீளமைப்பு தொடர்பான விஷேட ஜனாதிபதி செயற்பாட்டு அணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.