மக்கள் ஆணைக்கு முரணாக முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பு-

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே மாகாணசபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிமைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசியிடம் கூறியுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்திருந்தது. அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரச கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது. இந்த சூழ்நிலையில், மீண்டும் அரச கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது. அரசாங்க கூட்டணியிலும் பார்க்க 6ஆயிரத்து 100வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்றிருந்தது. எம்மைவிட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையே வென்றிருந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தது. எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என இரா. சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் -பான் கீ மூன்

உள்நாட்டு விசாரணைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கின்ற அதேநேரம், சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாக அவரது பேச்சாளர் ஸ்டெபன் டுஜாரிக் கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டில் விசாரணை நடத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஐக்கிய நாடுகளின் பொது செயலரால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகளால் மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முடிவுக்கு சீனா வரவேற்பு-

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் சீனாவின் கடல்சார் புதிய பட்டுப்பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முக்கிய சகாவாக விளங்குகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஜனநாயக சமூகத்தை உருவாக்க அமெரிக்கா ஒத்துழைப்பு-

இலங்கையில் திறந்த மற்றும் ஜனநாயக சமூகத்தை உருவாக்க அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசைன் ரைஸ் தெரிவித்துள்ளார். வியட்நாம், துனிஷியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமெரிக்கா உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின், தேசிய பாதுகாப்பு மூலோபாயங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுசைன் ரைஸ் இதனைக் கூறியுள்ளார்.