காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு-

Janathipathi anaikulu (2)யுத்தகாலத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணை காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளர் எச்.டபிள்யு. குணதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 15ம் திகதியுடன் இந்த ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நிறைவடைவதாக இருந்தது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதன் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தங்களின் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் காணாமல் போன பொது மக்கள் தொடர்பில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான முறைபாடுகளும், காணாமல் போன இராணுவத்தினர் தொடர்பில் 5 ஆயிரம் முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்பார்க்கும் இந்தியா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் செயிட் அக்பருதீன் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை இந்திய உறவில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என செயிட் அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க Read more