காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு-

Janathipathi anaikulu (2)யுத்தகாலத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணை காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளர் எச்.டபிள்யு. குணதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 15ம் திகதியுடன் இந்த ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நிறைவடைவதாக இருந்தது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதன் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தங்களின் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் காணாமல் போன பொது மக்கள் தொடர்பில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான முறைபாடுகளும், காணாமல் போன இராணுவத்தினர் தொடர்பில் 5 ஆயிரம் முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்பார்க்கும் இந்தியா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் செயிட் அக்பருதீன் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை இந்திய உறவில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என செயிட் அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க

கிழக்கில் இணக்க அரசியல் நடத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு-

கிழக்கு மாகாண சபையில் மாகாண தேசிய அரசாங்கம் போன்ற மாதிரியை உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கட்சித் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இந்த அழைப்பை விடுத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுத் தேர்தலின் பின்னர் மத்தியில் அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தைப் போல, கிழக்கு மாகாண சபையிலும் இணக்க அரசியல் ஒன்றை ஏற்படுத்த அந்த கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.தே.க.வுடன் இணைந்து மலையக மக்கள் முன்னணி போட்டி-

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களில் மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்கும் ஐ.தே.கட்சியின் முயற்சிக்கு, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தே ஆதரவு வழங்கினோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் இணைந்தே போட்டியிடவுள்ளோம். மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பேதமின்றி சகல மாவணர்களுக்கும் உணவை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக 160கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இன, மத, பேதங்களை மறந்து சமூக அடிப்படையில் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இந்த அமைச்சின் செயற்பாடுகள் மூலம் சமூக ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

தண்டவாளத்தில் படுத்திருந்தவர் ரயில் மோதியதில் பலி-

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கையடக்க தொலைபேசியில் பாடலை இரசித்தபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர். உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த சரவணபவன் சங்கீதன் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைக்கு சிறப்பு குழு நியமனம்-

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், பிரதமர் ரணில்விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த தினம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் 3 பேர்கொண்டு குழு ஒன்றை உருவாக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத்தை மதிக்கும் நாடாக மாற வேண்டும் – அமெரிக்கா- 

சர்வதேச சமுகத்தை மதித்து செயற்பட வேண்டிய நாடாக மாறுவதற்கு சரியான தருணத்தில் இலங்கை இருப்பதாக அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிலின்கென் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் யாழ்ப்பாணம் முதல் காலி வரையான மக்கள் நல்லாட்சி ஒன்றுக்கான தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளனர். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி, நல்லாட்சியை கொண்டு வருவதற்கான தேவையை நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர். இதனை மதித்து புதிய அரசாங்கம் நல்லாட்சிக்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹேமசிறி இலங்கை வங்கியின் புதிய தலைவர், ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்ரம-

இலங்கை வங்கியின் புதிய தலைவராக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் நாளை தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக மீண்டும் மலிக் சமரவிக்ரம தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் நடைபெறுகின்றது.

தாமரைத்தடாக வீதியின் பெயர் மாற்றம்-

‘நெலும் பொக்குன மாவத்தை’யின் (தாமரைத் தடாக வீதி) பெயர், ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கொழும்பு மாநகரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்ட்டன் பிளேஸ் சுற்றுவட்டம் முதல் பொது நூலக சுற்றுவட்டம் வரையான வீதியே இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.