அதி திறமை சித்திபெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் பாராட்டி ஊக்குவிப்பு-
யாழ்ப்பாணம் மீசாலை, வீரசிங்கம் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற ஆர்.தனுஜன் என்ற மாணவர் அகில இலங்கை ரீதியில் அதிதிறமை (3யு) சித்திபெற்று நேரடியாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மாணவர் தனுஜனுடைய திறமையை மெச்சி அவரைப் பாராட்டி வாழ்த்தி இன்று (09.01.2015) வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அவருக்கு ஊக்குவிப்பு அன்பளிப்பை வழங்கியுள்ளார்.
வித்தியாலயத்தின் அதிபர் திரு. த.அம்பலவாணர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
இந்த மாணவரை நாம் ஊக்குவிப்பது, இங்கிருக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் இந்த மாணவரை முன்மாதிரியாகப் பின்பற்றி தங்கள் கல்வி செயற்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் ஊக்குவிக்கின்றோம்.
இப்போது கிராமப் புறங்களைச் சேர்ந்த பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நகர்ப் புறங்களில் இருக்கக்கூடிய பெயர்பெற்ற பாடசாலைகளுக்கே கல்வி கற்பதற்காக அனுப்ப வேண்டுமென்றும், அங்குதான் கல்வி சிறந்து விளங்குமென்ற நம்பிக்கையில் நகரப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முயற்சிகளை எடுப்பதுடன், பிள்ளைகளையும் அங்கு சேர்க்கின்றார்கள்.
ஆனால் கிராமப் பாடசாலையைச் சேர்ந்த இந்த மாணவர் இப்படியான ஒரு மிகச் சிறந்த சித்தியினைப் பெற்றதன்மூலம் கிராமப் பாடசாலைகளும் எந்தவிதத்திலும் நகரப் பாடசாலைகளுக்கு குறைந்தவையல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும். எனவே, கிராமத்து மாணவர்கள் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் செல்வதன் மூலம் கிராமமும் பாடசாலைகளும் முன்னெறுவதுடன் அந்தப் பிள்ளைகளுக்கும் அது வசதியாக இருக்கும்.
மேலும், கிராமப் பாடசாலைகளை முன்னேற்றுகின்ற பணிகளில் அதிபர்களும், ஆசிரியர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்கள். ஆகவே மாணவர்களும் மிகவும் அக்கறையுடன் கல்வி கற்பதன்மூலம் கிராமங்களையும் கிராமப் பாடசாலைகளையும் முன்னேற்றுவதற்கு அது உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.