‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’  விழிப்புணர்வு போராட்ட அழைப்பு

waterயாழில் தற்பொழுது நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வு போராட்டம் ஒன்று சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15, 02, 2015. காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு 06, வெள்ளவத்தையில் (கொமர்சியல் வங்கிக்கு அருகில்) ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ள அழைப்பு,
யாழ். குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய் கழிவுகளின் கலப்பினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகின்றது.
நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ். குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.
அதுபோல, எண்ணெய் கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும் துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.
இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும்.
இன்று யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கெனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைக்கின்றோம்.
„சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்’

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு செயலகம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவால் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோநேதராகலிங்கம், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 
1990ஆம் ஆண்டு புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக முல்லைத்தீவு நகரின் சகல கட்டுமானங்களும் அழிவடைந்தன. இதனால் நகரத்தை விட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். பின்பு 1996ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்த மக்கள், 2004ஆம் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பாதிப்புக்குள்ளாகினார். இதன்போது 3000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

2008ஆம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்றபோதும் முல்லைத்தீவு நகரம் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.  2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், முல்லைத்தீவு நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடப் பணிகள் 220 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் இரு பிரதேச சபைகளுக்கு தேர்தல்

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை முதல் வாக்காளர் அடடைகள் விநியோகிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரா சசீலன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘கடந்த 2012ஆம் குறித்த இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததுடன், அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட போது நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த தேர்தல் பிற்போடப்பட்டிருந்தது. எனினும் குறித்த இரு பிரதேச சபைகளுக்கும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் இம்மாதம் 28ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 90 வேட்பாளர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களை தெரிவு செய்ய 72 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர். இதேவேளை, கரைத்துறைப்பற்றில் 23,559 பேரும், புதுக்குடியிருப்பில் 29,279 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை வியாழக்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்