இனப்படுகொலை என வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம். குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரிப்பு

fig-17இலங்கையின் வடமாகாணசபையில் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்துவந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை, இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஆண்டு சபையில் சமர்ப்பித்திருந்தார்.
அப்போது, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்கள் கிடையாது, அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்ற வகையில் காரணங்கள் கூறப்பட்டிருந்தது. அதனையொட்டி கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்று அந்தப் பிரேரரணை சமர்ப்பிக்கப்படாமலே இருந்துவந்தது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என தெரிவித்து, அந்தப் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஒப்புதலுடன் இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்த முதலமைச்சர் அது குறித்து தமிழில் விடேச அறிக்கையொன்றை வாசித்ததுடன், நீண்ட விளக்கம் ஒன்றை ஆங்கில மொழியில் வழங்கினார். பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களும் எழுந்து நின்று அதனை வழிமொழிந்தனர். அதன்பின்னர் சபையில் நிறைவேற்றப்பட்டது.
சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தமது கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை நீக்கினால் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்தார். ஆயினும் அந்த விடயத்தை நீக்குவதற்கு மறுத்து, ஈபிடிபி என்ற கட்சியின் பெயர் மாத்திரம் நீக்கப்பட்டதையடுத்து, அவரும் பிரேரணையை ஆதரித்திருந்தார்.

_ltte_crimes_exhibitionஇலங்கை அரசு நிராகரிப்பு: இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
போரினால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
இறுதிகட்டப் போரின்போது ஏராளமானத் தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என அவர் கூறுகிறார்.
மாற்றம் ஏன்? இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடமாகாண முதல்வரும், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரன் அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும் எனக் கூறும் அமைச்சர் ராஜித சேனாரட்ண, கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் இப்போது எப்படி அதை ஏற்றார் எனவும் கேள்வி எழுப்புகிறார்.
இருதரப்பினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளும், பிரபாகரன் அவர்களும் பொதுமக்களை போரின்போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதிகட்ட போரின்போது ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
போர் முடிந்த பிறகு எந்த தமிழ் அரசியல் தலைவரும் இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை எனக் கூறும் அவர், இனப்படுகொலை என்று கூறி இயற்றப்பட்டுள்ள வட மாகாண சபையின் தீர்மானத்தை மத்திய அரசு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளாது என உறுதிபட தெரிவித்தார்.