காங்கேசன்துறை துறை முகத்தை புனரமைக்கவுள்ளதாக அறிவிப்பு

kankesanthuraiகாங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுக அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை வருகை தந்த அமைச்சர், துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பாதுகாப்பு தேவைகளுக்கு தவிர ஏனைய காணிகளை பொது மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதேபோல காங்கேசன்துறை துறைமுகத்தை கடற்படையிடம் இருந்து பெற்று, வர்த்தக நோக்குக்காக அதனை புனரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும். துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

பெண்களும் பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.

poardamஇலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு தங்களின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு மகஜர் வடிவில் அனுப்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகளில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலும் தாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட உள்ளுர் நடவடிக்கைகளில் தோல்வி கண்ட நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை முக்கியத்துவம் பெறுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் ஐநாவின் விசாரணை அறிக்கை அவசியமானது என்று தாங்கள் நம்புவதாகவும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 28-வது கூட்டத் தொடரில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மகஜரில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் நடந்த உரிமை மீறல்கள், காணாமல்போதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக உள்ளுரில் விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்படும் என்ற புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனால், ஐநா மனித உரிமை பேரவையின் நிபுணர்கள், சர்வதேச நீதித்துறை நிபுணர்கள், காணாமல்போனோர் தொடர்பான விவகாரங்களுக்கான ஐநாவின் நிபுணர்கள் போன்றோரின் பங்களிப்புடன் இந்த உள்ளுர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளுரில் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் முன்னிலையிலும் பல்வேறு விசாரணைகளிலும் சாட்சியமளித்துள்ளனர்.
எனினும், அவர்களுக்கு இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை என்றும் ஐநா மனித உரிமை விசாரணை அலுவலகத்தின் அறிக்கை ஐநா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் வெளியிடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது மகஜரில் குறிப்பிட்டுள்ளனர்