யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விடுவிப்பு

IMG_4137யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட  சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே  அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வலவாய் கிராம சேவைப்பிரிவு  ஜே 284க்கு சொந்தமான 220 ஏக்கர் காணி மீள கையளிக்கப்படும். இதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச் என 1,022 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படும் எனவும் பாடசாலை, ஆரம்பப்பாடசாலை, வைத்தியசாலை, சமயஸ்தலங்கள், தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் இங்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும்;.
மிகுதி 780 ஏக்கர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
யுத்தகாலத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 11,639 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவு நிலம் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை இராணுவப் படை வசம் 6,152 ஏக்கர் நிலம் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்றது. தற்போதுள்ள 6152 ஏக்கர் நிலத்திலிருந்தே குறிப்பிட்ட மீள்குடியேற்றத்துக்கென 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை – கிழக்கு மாகாணத்தில் விமானப்படை உயர்பாதுகாப்பு வலயமான பானம பிரதேசத்தில் தற்போது  கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற 25 ஏக்கர் நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவையினால்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தவிர்ந்த சம்பூர், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் மக்களது நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு கீழ் உள்ளன.
எனவே, அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இப்பிரதேச மக்களதும் நிலங்களை வழங்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.