இடமாற்றம் கோரி அதிகஸ்ட கஸ்ட பிரதேச ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-

aasiriyarkal poraattam aasiriyarkal porattam (2) aasiriyarkal porattamஅதி கஸ்ட மற்றும் கஸ்ட பிரதேசங்களில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ்.செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று மேற்படி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 200ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றத்தினை கோரியிருக்கின்றனர். கடந்த 2015 ஜனவரி 01ஆம் திகதி தமக்கு இடமாற்றம் வழங்கப்படுமென கல்வி அமைச்சினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் பிற்போட்டிருந்துள்ளது. ஆனால், இதுவரையில் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான இடமாற்றத்தினை உடனடியாக வழங்குமாறும் ஆசிரியர்கள் கோரியிருந்தனர். கை குழந்தைகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள்கூட தமது குழந்தைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தீவகம் மற்றும் வன்னி மாவட்டங்களில் கடமையாற்றிய தாம் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்தும், இடமாற்றம் வழங்காது கல்வி திணைக்களம் புறக்கணித்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளர். இதுகுறித்து வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலனுடன், ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர். அந்த கலந்துரையாடலின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் ச.சத்தியசீலன் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றத்திற்கான கடிதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும், ஏப்ரல் 01ஆம் திகதிக்கு யாழ்.மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று வரமுடியுமென்றும் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியின் பிரகாரம் தமது ஆர்ப்பாட்டத்தினை ஆசிரியர்கள் நிறுத்தியதுடன், குறிப்பிட்ட திகதிக்குள் தமக்கான கடிதமும் இடமாற்றமும் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.