சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 35பேர் கைது-
மாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்றுகாலை கைதுசெய்துள்ளது. சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்கள் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உலருணவு பொதிகள் மற்றும் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
புதுகுடியிருப்பு, கரைதுறைப்பற்று வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை-
புதுகுடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று வாக்காளர்கள் பெப்.21 வரை தற்காலிக அடையாள அட்டைகளை பெற முடியும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோர், தங்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை முல்லைத்தீவு தேர்தல் செயலகத்தில் பெறமுடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் கோயிலுக்குச் சென்றவரைக் காணவில்லையென முறைப்பாடு-
யாழில் சிவராத்திரிக்கு ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என, அவரது மனைவி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ். வடமராட்சி கொற்றாவத்தையை சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்பவரே காணாமல் போயுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பொலிகண்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் பொலிகண்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து காணாமல் போனவரின் துவிச்சக்கர வண்டி, அவருடைய பேர்ஸ் என்பவற்றை இன்றுகாலை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர
இலங்கை – இந்திய அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு-
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை விதிகளுக்கு அமைய பாதுகாப்பாகவும் ஏனைய சர்வதேச வரம்புகளுக்கு உட்பட்டும் இந்த உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அமெரிக்கா இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சக்கி தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய அணு ஒப்பந்த விழிப்பு குறித்து தான் விழிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தியாவுடன் அணுசக்தி உள்ளிட்ட நான்கு அம்ச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
குமார் குணரத்னத்தின் மனு நீதிமன்றால் நிராகரிப்பு-
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னை கைதுசெய்து நாடு கடத்துவதை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி குமார் குணரத்னம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்தபோது குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் இன்று குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குமார் குணரத்னம் சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை நீக்கத்தை அடுத்து குமார் குணரத்னம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை-
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று ஆஜர் செய்யப்பட்டபோது மேற்படி பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்குதல் நடத்தி கலகம் ஏற்படுத்திய சம்பவத்தில் பாலித தெவரப்பெரும கைதுசெய்யப்பட்டு சுமார் ஒன்றரை மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை – இந்திய உறவு தொடர்பில் சீனா மகிழ்ச்சி-
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான புதிய உறவு மகிழ்ச்சி தருவதாக சீனாஅறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் தமக்கு மகிழ்ச்சி தருவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் {ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை – சீனா இடையே நட்பு, நல்லுறவு காணப்படுவதாகவும் சீனாவை பொறுத்தமட்டில் இலங்கையும் இந்தியாவும் முக்கிய அயல் நாடுகள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள சீனா விரும்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.