மூன்று பிரதான அம்சங்களில் அரசியலமைப்பில் மாற்றம்-பிரதமர் ரணில்-

ranil01அரசியல் அமைப்பு பிரதான மூன்று அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தில் மாத்திரம் சில அதிகாரங்கள் அவருக்கு உள்ளவாறே வழங்கப்படும் என்றும் இதற்கு பல தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுயாதீனமாக விசாரணை நடத்த வேண்டும் – கமியுனிஸ்ட் கட்சி-

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில், இந்தியா சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மார்க்சிஸ்ட் கமியுனிஸ்ட் கட்சி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில், தமிழ் மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் இடம்பெற்றன. இது தொடர்பில் இந்தியா சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும். அதேநேரம், தமிழ் மக்களின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதற்கு, இந்திய அரசாங்கம் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த விடயங்களை வலியுறத்தி, அந்த கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.எஸ் இன் படுகொலை நடவடிக்கைக்கு இலங்கை கண்டனம்-

imagesCAAFRW6Nஎகிப்தில் கொப்டிக் கிறிஸ்த்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடுரமான முறையில் கொலை செய்தமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 15ம் திகதி, குறித்த 21 கிறிஸ்த்தவர்களையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்று தீ வைத்து கொலை செய்திருந்தனர். இந்த அடிப்படைவாத செயலை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை படுகொலைக்கு கோத்தபாயவே பொறுப்பு-சரத் பொன்சேகா-

sarath fonsekaகொழும்பு, வெலிக்கடைச் சிறையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 20க்கும் அதிகமான கைதிகளும், விசேட அதிரடிப் படையினரும் காயமடைந்தனர். சில கைதிகளை கொலை செய்யும் நோக்கில் கோத்தபாய ராஜபக்ஷ தனக்கு விசுவாசமான சில அதிரடிபடையினரை பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்காவுக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ இதேவேளை மேற்கொள்வார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் செய்வாராயின், இலங்கை ஜனாதிபதி ஒருவர் 31 வருடங்களுக்கு பின் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1984ஆம் ஆண்டு ஜீன்மாதம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் 13ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

புதிய இராணுவத்தளபதி நியமனம், மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கம்-

1army_maithiriஇலங்கையின் 21வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மாங்குளம் பொலிஸ் பிரிவின்கீழ் இயங்கிய ஆறு பொலிஸ் நிலையங்கள் வேறு இரு பொலிஸ் பிரிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இரண்டு பொலிஸ் நிலையங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கும், நான்கு பொலிஸ் நிலையங்கள் வவுனியா பொலிஸ் பிரிவிற்கும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது ஏ9 வீதியில் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடர்களை தவர்க்கும் பொருட்டு மாங்குளம் பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாகவும், தற்கோது யுத்தம் நிறைவடைந்து குறித்த வீதியில் காணப்பட்ட போக்குவரத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத்தை இலகுபடுத்தும் வகையில் மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா செல்ல ஏற்பாடு-

mangalaஜெனீவாவில் இடம்பெறவுள்ள உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் மார்ச் 2ம் திகதி இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்மட்ட கூட்டத்தின் பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_ஸைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை குறித்து தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா மனித உரிமை ஆணையகம் பிற்போட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாகிஸ்தான் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு-

sri pakiஇலங்கை அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியா சென்றிருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க டெல்லியில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். பாகிஸ்தானுடன் உறவினை வலுப்படுத்திக் கொள்ளவென “தொழில்நுட்ப திறன் மற்றும் மனித திறமைகளை” உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை எதிர்பார்த்துள்ளது. ரஸ்ய அரசுக்குச் சொந்தமான றொசாடொம் நிறுவனத்துடன் முன்கூட்டியே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவும் இலங்கை எதிர்பார்த்துள்ளது. ஆனால் அந்த நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பு கிடையாது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மூழ்கிய தோணியிலிருந்து பத்துப்பேர் மீட்பு-

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆற்றில் இன்றுகாலை தோணியொன்று கவிழ்ந்ததால், தோணியில் பயணித்த ஒரு வயதுச் சிறுவன் உட்பட 10 பேர்; மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு தேவைகள் கருதி நாசீவன்தீவு கிராமத்திலிருந்து வாழைச்சேனை நகருக்கு இவர்கள் தோணியில் பயணித்துள்ளனர். இதன்போது மேற்படி தோணி திடீரென்று கவிழ்ந்த நிலையில் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இவர்களின் கூச்சல் கேட்டு, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் நின்ற மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று ஆற்றில் மூழ்கியவர்களை காப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். காப்பாற்றப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விசாரணைகளின்; பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தங்களது பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள் ஆற்று நீரில் மூழ்கியுள்ளதாக காப்பாற்றப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைது-

இந்தியாவின் கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவிருந்த 101 கிலோகிராம் கொண்ட கஞ்சாப்பொதிகளுடன் நான்கு சந்தேகநபர்களை நேற்று யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் கைதுசெய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி.சில்வா இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மாதகல் துறைமுகம் ஊடாக கஞ்சா கடத்தி அதனை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில்; கும்பல் ஒன்று ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கஞ்சாப்பொதிகளை கடத்திச்சென்ற கண்டியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரத்தை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுமாக நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். வடி ரக வாகனத்திலிருந்து 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 45 கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, 2 முச்சக்கரவண்டிகள், ஒரு வடி ரக வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, இவர்கள் சுன்னாகத்திலிருந்து கொழும்புக்கு வாழைக்குலைகள் ஏற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது.