யாழில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்-
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடாமல் மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பஸ்நிலையம் முன்பாக இன்றுகாலை 10மணியளவில் ஆரம்பமான இப் போராட்டம் 11மணிவரை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக சத்திரசந்தியை அடைந்து, பின் காங்கேசன்துறை வீதி வழியாக உலக தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடம் முன்பாக சென்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தின் இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலர் செ.கஜேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் சி.பாஸ்கரா, தி.நிரோஷ் மற்றும் பிரேதசசபை உறுப்பினர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.