உள்நாட்டு விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு-

இலங்கைமீது முன்வைக்கப்படுகின்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. அசோசியட் பிரஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 2ம் திகதி ஆரம்பமாகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டின் நிமித்தம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா செல்கின்றார். அவர் மனித உரிமைகள் உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது யுத்தக் குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதன் பொருட்டும், அதற்கு ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்-

முடியுமாக இருந்தால் மகிந்த ராஜபக்ஷவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட செய்யுங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் முழு பொறுப்பாளியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாடுகிறார். அந்த கட்சியின் சின்னங்களாக இருந்த கை, வெற்றிலை மற்றும் கதிரை என்பவற்றின் உரிமைகள் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கே இருக்கின்றன. இந்நிலையில் மகிந்தவை எவ்வாறு அவர்கள் தேர்தலில் போட்டியிட செய்வார்கள்? சக்கர சின்னத்திலா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம் கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்த அரசை மாற்றறுவதற்காக சிலர் மகிந்தவை மீண்டும் போட்டியிட வைக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நுகேகொட கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே நினைக்கின்றேன். அவ்வாறு மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டாலும், நாம் எந்த தருணத்திலும் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கு முன்னர் மகிந்தவை எதிர்த்து தாம் ஒருமுறை போட்டியிட்டிருந்ததாகவும், அதன்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியால் மகிந்த ராஜபக்ச அத் தேர்தலில் வெற்றிபெற்றார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சி பாதுகாப்பு சட்டத்தை உரிய வகையில் அமுலாக்கப்பட வேண்டும்-கூட்டமைப்பு-

சாட்சி பாதுகாப்பு சட்டத்தை உரிய வகையில் அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியடைகிறது. பாதுகாப்பு பற்றிய உறுதி இல்லாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வரவில்லை. ஆகவே இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதுடன் நிறுத்தப்படாமல், அது உரிய வகையில் அமுலாக்கப்பட வேண்டும் எ; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த சட்டமூலமானது கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கழிவு ஒயில் கலந்த பகுதிகளில் குடிநீரை விநியோகிக்க ஏற்பாடு-

யாழ்ப்பாணம் வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் சில கிணறுகளில் கழிவு ஒயில் கலந்திருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முதற்கட்டமாக இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சுற்றாடலில் வசிக்கும் மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கமைய கழிவு ஒயில் கலந்திருப்பதாக இனங்காணப்பட்ட இடங்களில் 04 தண்ணீர் தாங்கிகள் வைத்து குடிநீர் வழங்குவதற்குரிய ஒழுங்குகளை வலி. தென்மேற்குப் பிரதேசசபை மேற்கொண்டுள்ளது. முதன்முதலாக வலி. தெற்கு கிணறுகளில் காணப்பட்ட கழிவு ஒயில்படலம் நாளடைவில் வலி. வடக்கு கிணறுகளுக்கும் ஊடுருவி தற்பொழுது வலி. தென்மேற்கு வலிகாமம் மேற்கு ஆகிய பிரதேச கிணறுகளிலும் படிந்துள்ளது. வலி. தென்மேற்குப் பிரதேசத்திலுள்ள சுதுமலை வடக்கு, தெற்கு மானிப்பாய், மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள 28 கிணறுகளில் கழிவு ஒயில் கலந்திருப்பதாக சந்தேகப்பட்டதை அடுத்து சுதுமலை வடக்கு மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள இரு கிணற்று நீர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டது. மேற்படி இரு கிணறுகளிலும் உள்ள நீரில் கழிவுஒயில் கலந்திருப்பதாக பரிசோதனையில் உறுதியானதையடுத்து முதற்கட்டமாக இப்பகுதியைச் சூழவுள்ள சுமார் 80 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர் குறித்த பேச்சுவார்த்தையை பிற்போடுவதற்கு முயற்சி-

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சர் டிலிப் வெதஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. தமிழக மீனவர்களின் இழுவை படகுகளே இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினையாக காணப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அரசாங்கம் முன்வைத்த மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பேச்சுவார்த்தைய பிற்போடுவதற்கு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலைக்கு விஜயம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை (23..02.2015) திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் சம்பந்தமாக அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் தெரிவு தொடர்பில் பெப்ரல் அறிக்கை-

அரசியல் கட்சிகள் தேர்தல்களுக்காக தங்களின் வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கை ஒன்றை பெப்ரல் அமைப்பு தயாரித்துள்ளது. இந்த அறிக்கை நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த மஹாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதாக பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யாமை உள்ளிட்ட 12 விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் 12ம் திகதி சகல அரசியல் கட்சிகளுக்கும் கையளிக்கப்படவுள்ளது என ரொஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை-

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிக்கு கண்ணாடி கவசங்களை இடுவதற்கு கலை மற்றும் கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்கள் இடுவது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட முகாமையாளர் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சீகிரியா ஓவியங்களின் பாதுகாப்பு தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஓவியங்களை சேதப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்களை இடுவதால் இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்த்துக் கொள்ளமுடியும் என மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட முகாமையாளர் சந்தன வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்ப அரசியலை பின்பற்றப் போவதில்லை-ஜனாதிபதி மைத்திரிபால-

கடந்த அரசாங்கம் பின்பற்றிய குடும்ப அரசியலை தாம் பின்பற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாகொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப மரம் அல்லது வனம் தமது கொள்கை இல்லை. முழுநாட்டையும் தமது கிராமமாகவும், அனைத்து மக்களையும் தமது உறவினர்களாகவுமே தாம் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணை அறிக்கை கோரி யாழில் ஆர்ப்பாட்டம்-

சர்வதேச விசாரணை அறிக்கையை ஏற்கனவே வெளியிடுவதாக கூறப்பட்ட தினத்திலேயே வெளியிடுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ் பல்கலைக்கழக சமுகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ் பல்கலைக்கழக ஆசியர்கள் ஒன்றியம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இதற்கிடையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தரம் இரத்தாகவில்லையென குற்றச்சாட்டு-

கடந்த கால அரசாங்கத்தினால் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவத் தரங்கள் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சராக பதவி ஏற்ற அகில விராஜ் காரியவசம், அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவத் தரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். எனினும் இதுவரையில் அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

வவுனியா ஏ9 வீதியில் தாண்டிக்குளம் விவசாயப்பண்ணை முன்பாக நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியொன்றில் பயணித்தவரை, சொகுசு வாகனம் ஒன்று மோதிச் சென்றதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, சாஷ்த்திரிகூழாங்குளத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் பலியானதான தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியகல்லாறில் மிதிவெடி மீட்பு-

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மதிவெடியொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்றுக் காலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதனைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த மிதிவெடி அவ்விடத்தில் கொண்டுவரப்பட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.