நீதியமைச்சர் விஜயதாஸ லண்டனுக்கு விஜயம்-

wijayadasa rajapakseநீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் செய்கின்றார். பிரசித்தி பெற்ற மக்னா காட்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 800 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பிரிட்டனின் லண்டனில் சர்வதேச சட்ட சம்மேளனமொன்று நடைபெறுகிறது. மாநாட்டை ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மற்றும் நாடுகளின் நீதி அமைச்சர்கள், சட்டமா அதிபர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். நிலையான அபிவிருத்தி, சட்ட அடிப்படை, சர்வதேச பொருளாதார சட்ட நியதிகள், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் நூதன ஜனநாயகம் தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரியவருகிறது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

K. Shanmugamஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரையும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தந்தையின் பாதுகாப்பு பிரிவில் இணைக்குமாறு யோசித்த வேண்டுகோள்-

yosithaதனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் தன்னை நியமிக்குமாறு யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த முறைபாடு தொடர்பாக கடற்படையினர் ஏற்கனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், யோசித்த ராஜபக்ஷ எவ்வாறு கடற்படையில் இணைந்துக்கொண்டார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் மீது கல்வீச்சு-

accidentமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மீது புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்றுஅதிகாலை 1.30அளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார். அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக பஸ் சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் தனியார் பஸ்கள்மீது இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பூரில் ஆயுதங்கள் மீட்பு-

arms ammo.திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மன் நகர் கிராமத்தில் நேற்று பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் ஆயுதங்கள் தனியாரின் நிலக்கடலை தோட்டத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களில் மிதிவெடி-19, ரீ56 ரக மெகஸின்-13, எஸ்.ஜீ.ரவுண்டஸ்-07, கிரனைட்-02, கிளைமோர்-01, டெட் நைட்டர்-02, ஆட்லரி சாச்சர் கூர்-2, டொம்பா ரவுண்ஸ்-05, கிளைமோர் ரிமோட்-01, மோட்டார்கன் பியுஸ்-04, ரீ56 துப்பாக்கி ரவைகள் 1069 போன்றன அடங்குவதுடன், புலிக்கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு-

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் 2011 ஆண்டு ஜூலை 17ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் சட்டவிரோத பேரணியொன்றில் கலந்துகொண்டதாக கடுவளை மாநகர மேயர் ஜே.எச்.புத்ததாச மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் அமைச்சரிடம் இன்று வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண முதலமைச்சரை நீக்குவதற்கு முயற்சி-

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ரஞ்சித் சோமவங்சவை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழ். வாள்வெட்டில் குடும்பஸ்தர் பலி-

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டு நடத்திய சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர். இதன்போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

திருமலை ஹபரண பிரதான வீதியில் விபத்து, 50ற்கும் மேற்பட்டோர் காயம்-

திருகோணமலை – ஹபரண பிரதான வீதியில் இனாமலுவ பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 50ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாரவூர்தியொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்த நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 35 பேர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்த கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளது.