ஐ.நா அறிக்கை பிற்போடலை ஆட்சேபித்து யாழில் பேரணி-
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை துரிதப்படுத்தக் கோரியும் யாழில் இன்று ஆர்ப்பாட்;டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக ஆசிரிய சங்கத் தலைவர் ராசகுமாரன் இதுபற்றி கருத்துக் கூறுகையில், அமைதியாக இடம்பெற்ற இந்த போரணியில் பல்லாயிரம் கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இது தமிழர்களின் ஒன்றுமையை உலகுக்கு எடுத்து காட்டுவதாக அமைந்திருந்தது என்றார். குறித்த ஆர்ப்பட்டப் பேரணி யாழ்ப்பாண வளாகத்தில் ஆரம்பித்து பலாலி மற்றும் அநுராதபுரம் சந்தி ஊடாக சென்று நல்லூர் வடக்கு வீதியில் உள்ள திடலில் ஒன்றுகூடலுடன் நிறைவடைந்தது. இதன்போது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கவென மகஜர் ஒன்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் பேரணியில் யாழ். பல்கலைக்கழக சமூகம், பொதுசன அமைப்புக்கள், அரசியல் கட்சியினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.