ஐ.நா. உயரதிகாரி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம்-
ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளையும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை சேர்ந்தவர்களையும் சந்திப்பதற்கு இவர் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்ரீபன் டுஜார்ரிக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர், பரஸ்பர முக்கியத்துவமுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஜெப்ரி பெல்ட்மனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்-
இலங்கையில் மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழர்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். கோயம்பத்தூரில் இன்றுஇடம்பெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐ.நா வின் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும். இந்தியா, இலங்கைக்கு ஆதரவு அளிப்பதை மாத்திரம் செய்யாது வெளிப்படையான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நியாயம் நிலைநாட்டப்படும் என தா.பாண்டியன் மேலும் கூறியுள்ளார்.
தனது ஆசனத்தை மீளப் பெற்றுத் தருமாறுகோரி மனுத் தாக்கல்-
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆசனத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். தமது பாராளுமன்ற ஆசனத்தை தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயந்த கெட்டகொடவை நீதிமன்றத்திற்கு அழைத்து பாராளுமன்ற ஆசனத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான காரணத்தை கேட்டறியுமாறும் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே தமக்கு எதிரான வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் வென்றெடுத்த பாராளுமன்ற ஆசனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தகமை தமக்குள்ளதெனவும் சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை நிறைவுக்கு கொண்டுவர முன்னாள் பிரதம நீதியரசர் எதிர்ப்பு-
சொத்து விவரங்களை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு முறைப்பாட்டாளர்கள் விருப்பம் தெரிவித்த போதிலும் வழக்கின் பிரதிவாதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லதுஹெட்டி, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டி முன்னிலையிலேயே, இந்த வழக்கை நிறைவுக்கு கொண்டுவருவதனை தான் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மேற்படி வழக்கு ஏப்ரல் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரிவு முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் கீர்த்தி சமரசிங்க திஸாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்றையதினம் கொழும்பு நீதவான் திலினி கமகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்கள் காணாமல் போனமை தொடர்பில் கீர்த்தி சமரசிங்க திஸாநாயக்க கடந்த 17ம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் விசேட தூதுவர் மலையகத்துக்கு விஜயம்-
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம் மற்றும் மலேசிய அரசின் இந்திய மற்றும் தென்னாசிய பிராந்தியத்துக்கான விசேட தூதுவர் டத்தோ எஸ்.சாமிவேலு ஆகியோருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் இன்றுகாலை இச்சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தோட்டபகுதி வீடமைப்பு தொடர்பான விடயங்களில் மலேசிய அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மலேசியாவின் அனுபவங்களின் ஊடாக இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகவிருந்தது என்று அமைச்சினுடைய ஊடகப்பிரிவு மேலும் கூறியுள்ளது.