கரைத்துறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசசபைகளுக்கான தேர்தல் பிரச்சாரம்-

valaignarmadammaanthalankokkuthoduvaialampilமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபை தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றையதினமும்(25.02.2015) முன்னெடுக்கப்பட்டிருந்தன. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான திரு. அற்புதராஜா, புன்னாலைக்கட்டுவன் லோகன் மற்றும் புளொட் முக்கியஸ்தர் திரு. சிவநேசன்(பவன்) ஆகியோர் புதுக்குடியிருப்பு நகரம், புதுக்குடியிருப்பு, மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், கொக்குத்தொடுவாய், அலம்பில், செம்மலை, தண்ணீர்ஊற்று, கணுக்கேணி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கலாக பல கிராமங்களுக்கும் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் மக்களை சந்தித்து கிராம ரீதியிலான சிறுசிறு கூட்டங்களை நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்கள்.

இச்சந்திப்புக்களின்போது உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு பெரியளவிலே வாக்களித்திருக்கின்றார்கள். அவருக்கு வாக்களிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டிருந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாக்களித்திருக்கவில்லை. ஒரு மாற்றத்தை வேண்டியே அவர்கள் வாக்களித்திருந்தார்கள். எனவே, தமிழ் மக்கள் அளித்த வாக்கை மதித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், தமிழ் மக்கள் இன்று முகம்கொடுக்கின்ற முக்கிய பிரச்சினைகளான, இடம்பெயர்ந்து மிக நீண்டகாலமாகவே தங்களுடைய சொந்த நிலங்களுக்குச் செல்லமுடியாத மக்களின் மீள் குடியேற்றம். சிறைகளிலே வாடுகின்ற இளைஞர்களின் விடுதலை, காணாமற்போனோர் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் சம்பந்தமாக ஒரு நியாயமான, நீதியான தீர்வினைக் காண்பது. இவைகளை அரசு செய்யவேண்டும். மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைக்கு ஒரு நியாயமான தீர்வுக்காகவும் தான் ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இந்த அரசு உணர்ந்து தனது கடமையை சரிவரச் செய்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றார்.