ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருமலை அமர்வுகள் இடமாற்றம்-
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை அமர்வுகள் இடம்பெறும் இடங்கள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆணைக்குழுவின் அமர்வுகளை இம்மாதம் 28ஆம் திகதிமுதல் மார்ச் 03ஆம் திகதிவரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும், மார்ச் 2, 3ஆம் திகதிகள் திருமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவிருந்த அமர்வுகள், திருமலை பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாஸ குறிப்பிட்டுள்ளார். மாவட்ட செயலகத்தில் குறித்த இரு தினங்களும் அமர்வுகளை நடத்துவதற்கு போதியளவு இடவசதிகள் இன்மையே இதற்குக் காரணமென அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இம்மாதம் 28ஆம் திகதியும், மார்ச் 01ஆம் திகதியும் ஏற்கனவே திட்டமிட்டவாறு காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் திருமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, அனைத்து முறைப்பாட்டாளர்களும் தமது சாட்சியங்களை பதிவுசெய்ய முடியுமெனவும், புதிதாக முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் எச்.டபிள்யூ குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
ஆழ்ந்த ஆய்வின் பின்பே விசாரணை அறிக்கையை பின்போட தீர்மானித்தது-ஐ.நா
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை ஆழ்ந்த ஆய்வின் பின்னரே பிற்போட தீர்மானித்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜோகிம் ரக்கொ இதனைத் தெரித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் வரையில் பிற்போடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு இணங்கியிருந்தது. இந்த தீர்மானம் முக்கியமான சந்தர்ப்பத்தில் மிகவும் ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ளப்பட்டதாக ஜோகிம் ரக்கொ குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்க தூதுக்குழு இனப்பிரச்சினை குறித்து ஆலோசனை-
இலங்கை வந்துள்ள தென்னாப்பிரிக்கவின் தூதுக்குழு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இந்த குழு இலங்கை வந்துள்ளது. கடந்த அரசாங்கத்தில், அமைச்சராக இருந்த எதிர்கட்சித் தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையிலான குழு ஒன்றே தென்னாப்பிரிக்காவுக்கு சென்று, தென்னாப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் அவருடன் இந்த குழு சந்திப்பை நடத்தி இருக்கிறது. இந்த குழு ஏற்கனவே நேற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நாடு திரும்பினார்-
உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி நாடு திரும்பியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது உரிய முறையில் தன்னால் கடமையாற்ற முடியவில்லை என்றும் தனக்கு மரண அச்சுறுத்தல் இருந்ததையடுத்தே அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அரசியல் நிலைமை நன்றாக இருப்பதனால் இந்த நாட்டுக்கு மீண்டும் திருப்பியதுடன் கடமைகளை மீண்டும் பொறுப்பேற்பதற்கு எண்ணியுள்ளதாகவும் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தானந்த மற்றும் சஜின் வாஸிடம் விசாரணை-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தனவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர். நிதி மோசடி தொடர்பில், ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச நிறுவனமொன்றின் முன்னாள் தலைவர் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், விசாரணை இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தந்தையின் பாதுகாப்பு பிரிவில் மகன் இணைவு, பந்து விக்ரமவுக்கு அழைப்பு-
கடற்படையில் கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய தந்தையின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு யோசித்த ராஜபக்ஷ ஏற்கெனவே கோரியிருந்தார இதேவேளை இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பந்து விக்ரமவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு முக்கியம் -மு.கா, சிறிலங்கா சுதந்திர கட்சி இனவாத கட்சி-ஐ.தே.க-
அரசியல் தீர்வின் ஊடாக மாத்திரமே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள தென்னாப்பிரிக்காவின் தூதுக்குழுவை சந்தித்து உரையாற்றிய கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் சரியான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படுவது அனைத்து சமுகங்களுக்கு முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சி இனவாதிகளின் கட்சி என்று தற்போது உறுதியாகி இருப்பதாக ஐ.தே.கட்சியின் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனவாதத்தை உயர்த்தி ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு-
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள காணியொன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் குண்டொன்று வெடித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இருந்த குண்டு வெடித்ததா? அல்லது யாராவது எறிந்த குண்டு வெடித்ததா? என்பது தொடர்பான விசாரணைகள் யாழ் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பொலனறுவையில் 3 பிரதேச சபைத் தலைவர்கள் நீக்கம்-
பொலனறுவை மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளின் தலைவர்களை அந்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி திம்புலாகல, மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், கடந்த 18ம் திகதிமுதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பேசல ஜெயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.