Header image alt text

பெரியமடு அம்பாள் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி-

IMG_6870வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று (26.02.2015) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு. ம.தியாகராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி.மங்களகுமார் மற்றும் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. ⇓Photos Read more

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபை தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை-

law helpமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளையதினம் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் இந்தத் தேர்தலை மார்ச் 27ம் திகதிவரை நடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1000 ஏக்கர் காணியில் மூன்று வாரத்தினுள் மீள்குடியேற்றம்-

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உள்ள ஆயிரம் ஏக்கர் காணியில் மூன்று கிழமைக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ் சென்றுள்ள அமைச்சர் இன்றுகாலை வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி. பலிஹக்கராவை ஆளுனர் அலுவலகத்தில் சந்தித்தார். அதன் பின்னர் வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக ஆளுனர், அரச அதிபர், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி, பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலுக்கு பின்னர்; ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் கூறுகையில், வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். அதில் முதல்கட்டமாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள 6300 ஏக்கர் காணியில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அங்கு மக்களை மூன்று கிழமை அவகாசத்துக்குள மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துரிதமாக அதை மேற்கொள்ள ஒரு செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் நாடுதிரும்பினர்-

sri lankan refugeesதமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்த 40க்கும் அதிகமான இலங்கை அகதிகள் சுயவிருப்பத்துடன் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் (யூ.என்.எச்.சீ.ஆர்) ஒத்துழைப்புடன் மேற்படி இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் இலங்கையின் வவுனியா, மன்னார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மனித உரிமைகள் குறித்து அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்-

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் பதவி ஏற்று சில காலத்திலேயே முக்கியமான சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி இருந்தது. அதேநேரம் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் துரித அவதானம் செலத்தப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜனாதிபதிக்கான அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சசி வீரவன்ச பிணையில் விடுதலை-

sashi weerawansaமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் சசி வீரவன்சவிற்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 15,000 ரூபா ரொக்கப் பிணை, 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் சசி வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மாதாந்தம் நீதிமன்ற பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாதெனவும் நீதவான் நிபந்தனை விதித்துள்ளார். சசி வீரவன்சவின் உடல்நலத் தகுதியை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி நேற்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். போலி ஆவணங்கள் சமர்பித்து இரு கடவுச்சீட்டுக்கள் தயாரித்த குற்றத்தின்பேரில் சசி வீரவன்ச கைது செய்யப்பட்டார். மாலபே தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டார். பின் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சைப் பெற்றுவந்தார். பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் சசி வீரவன்ச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த வேளையில் இப்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குமார் குணரத்தினத்தின் கோரிக்கை நிராகரிப்பு-

kumar gunaratnamமுன்னிலை சோசலிச கட்சியின் செயற்பட்டாளர் குமார் குணரத்தினத்தினால் இலங்கையில் குடியுரிமை கேட்டு முன்வைத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் பிறந்த குமார் குணரட்னம், பின்னர் அவுஸ்திரேலியாவின் குடியிரிமை பெற்றார். இந்நிலையில், தற்போது இலங்கையில் அரசியல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக, தமக்கு இலங்கையில் குடியுரிமை கோரி இருந்தார். இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் குடிவரவுத் திணைக்களம் விளக்கம் கோரி இருந்தது. இதனடிப்படையில் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மீனவர்கள் 86பேர் கைது-

indian fishermen arrestகடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 86பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக பதில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் வசமிருந்து 10 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் படகுகள் சகிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வேன் குறித்து சாட்சியமளிக்கத் தயார்-பிரஷாந்த ஜெயக்கொடி-

prashantha jayakodyவெள்ளை வேன் கலாச்சாரத்துடன் தொடர்புடைய நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டால் சாட்சியமளிக்கத் தான் தயார் என, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்த அவர் நாட்டிற்கு வந்துள்ளதோடு, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் பிரஷாந்த ஜெயக்கொடி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்தரத்திற்கு கணித பாடம் அவசியமில்லை-

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டியது அவசியமில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சில தொழில்கள், பாடநெறிகள் போன்றவற்றிற்கு கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு, இந்த சலுகையால் அவற்றில் இருந்து விடுபட இயலாது எனவும் மேலும் கூறியுள்ளது

யாழ். மாலுசந்தியைச் சேர்ந்த இளைஞனை காணவில்லை-

யாழ். மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை கடந்த 25ஆம் திகதி முதல் காணவில்லையென அவரது தாயாரால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. 25ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்திருந்த இரண்டு இளைஞர்கள் குளிர்பான நிலையமொன்றின் வேலைக்காக தனது மகனை அழைத்துச் சென்றதாகவும் அப்போது சென்றவர், இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் அந்த தாய், தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்ஸ்தானிகர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு-

uyar sthanikarkal niyamanamஇலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் மூவர் தமது நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர். இதன்போது ஜோர்ஜியா, கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கைகான புதிய உயர்ஸ்தானிகர்களே தங்களது நியமனக்கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.