Header image alt text

இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு 

59/2, Temple Road, Maskeliya. Phone No: 072 5316735 , 0777560863      
e-mail: edoscmb@yahoo.co     
10வது ஆண்டுவிழா 23.02.2015       (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
Maskeliya10Maskeliya1114.02.2015ம் திகதி மஸ்கெலிய சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் 10வது ஆண்டுவிழா நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கௌரவ வீ.ஆனந்தசங்கரி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
ஈடோஸ் நிறுவனத்தின் செயலாளரும் நிகழ்வின் தலைவருமான திரு இரா. சங்கையா அவர்கள் தனது உரையில் கௌரவ வீ.ஆனந்தசங்கரி அவர்களும் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் மலையக மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் எனவும் 1977மற்றும் 1983 ஆண்டுகளில் எற்பட்ட கலவரத்தில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த எமது மக்களை கிளிநொச்சி. வவுனியா. முல்லைத்தீவு. நெடுங்கேணி போன்ற பிரதேசங்களில் குடியேற்றிய பெருமை இவர்களையே சாரும் எனக்குறிப்பிட்டு அதனால்தான் இவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.  
மேலும் தனதுரையில் கலனிவத்த தோட்ட நிர்வாகம் எமது நிகழ்வில் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வதற்காக அன்று விடுமுறை கொடுத்து அனைவரையும் கலந்து கொள்ள ஏற்பாடுகளை செய்து கொடுத்தமைக்காக தோட்ட நிர்வாகத்தினருக்கு நன்றி கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

Read more

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்-

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், யாழ் நிலமைகளை கேட்டறிந்து கொண்டதுடன், கனடா அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்ததுடன், மேலதிக உதவிகளை புரிவதற்கு கனடா அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் தெரிவிப்பதாகவும் கனடா உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். அதன் பின்னர், யாழ். மாவட்ட வர்த்தக தொழிற்துறை மன்றத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வி இராஜாங்க அமைச்சரின் மூளாய் விஜயம்-

jaffna jaffna1யாழ். மூளாய் தென்இந்திய திருச்சபை தேவாலயத்திற்கு அதி தேவாலயத்தின் குருவான வண.செபஸ்டியன் அன்டனி அவர்களது அழைப்பின் பெயரில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. இராதாகிருஸ்னன் அவர்களும் அவர்களது பரியாரும் அண்மையில் வருகை தந்திருந்தனர் இவ் நிகழ்வின் போது உத்தியேகபூர்வ அழைப்பின் பெயரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்களும் இந்திய துணைத் தூதுவர் அவர்ளும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் தென் இந்திய திருச்சபை தேவாயத்தில் சிறப்பு வழிபாடுகள் தென் இந்திய திருச்சபையின் வண. செபஸ்டியன் அன்டனி அவர்களால் முன்னெடுக்கப்பட்டு அமைச்சர் மறறும் தவிசாளருக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து ஆலய குருவின் இல்லத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

நீதியமைச்சர் விஜயதாஸ லண்டனுக்கு விஜயம்-

wijayadasa rajapakseநீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ லண்டனுக்கு விஜயம் செய்கின்றார். பிரசித்தி பெற்ற மக்னா காட்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 800 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பிரிட்டனின் லண்டனில் சர்வதேச சட்ட சம்மேளனமொன்று நடைபெறுகிறது. மாநாட்டை ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மற்றும் நாடுகளின் நீதி அமைச்சர்கள், சட்டமா அதிபர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். நிலையான அபிவிருத்தி, சட்ட அடிப்படை, சர்வதேச பொருளாதார சட்ட நியதிகள், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் நூதன ஜனநாயகம் தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரியவருகிறது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

K. Shanmugamஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரையும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தந்தையின் பாதுகாப்பு பிரிவில் இணைக்குமாறு யோசித்த வேண்டுகோள்-

yosithaதனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் தன்னை நியமிக்குமாறு யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த முறைபாடு தொடர்பாக கடற்படையினர் ஏற்கனவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், யோசித்த ராஜபக்ஷ எவ்வாறு கடற்படையில் இணைந்துக்கொண்டார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பஸ் மீது கல்வீச்சு-

accidentமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மீது புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்றுஅதிகாலை 1.30அளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார். அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் இருந்த சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றதாக பஸ் சாரதி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலில் பஸ்ஸின் முன் கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் தனியார் பஸ்கள்மீது இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பூரில் ஆயுதங்கள் மீட்பு-

arms ammo.திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மன் நகர் கிராமத்தில் நேற்று பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் ஆயுதங்கள் தனியாரின் நிலக்கடலை தோட்டத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களில் மிதிவெடி-19, ரீ56 ரக மெகஸின்-13, எஸ்.ஜீ.ரவுண்டஸ்-07, கிரனைட்-02, கிளைமோர்-01, டெட் நைட்டர்-02, ஆட்லரி சாச்சர் கூர்-2, டொம்பா ரவுண்ஸ்-05, கிளைமோர் ரிமோட்-01, மோட்டார்கன் பியுஸ்-04, ரீ56 துப்பாக்கி ரவைகள் 1069 போன்றன அடங்குவதுடன், புலிக்கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இன்று வாக்குமூலம் பதிவு-

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று முற்பகல் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் 2011 ஆண்டு ஜூலை 17ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் சட்டவிரோத பேரணியொன்றில் கலந்துகொண்டதாக கடுவளை மாநகர மேயர் ஜே.எச்.புத்ததாச மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய முன்னாள் அமைச்சரிடம் இன்று வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண முதலமைச்சரை நீக்குவதற்கு முயற்சி-

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ரஞ்சித் சோமவங்சவை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழ். வாள்வெட்டில் குடும்பஸ்தர் பலி-

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டு நடத்திய சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர். இதன்போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

திருமலை ஹபரண பிரதான வீதியில் விபத்து, 50ற்கும் மேற்பட்டோர் காயம்-

திருகோணமலை – ஹபரண பிரதான வீதியில் இனாமலுவ பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 50ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாரவூர்தியொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்த நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 35 பேர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்த கதுருவெல நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளது.

உள்நாட்டு விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு-

இலங்கைமீது முன்வைக்கப்படுகின்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று அடுத்தமாதம் நடைபெறவுள்ளது. அசோசியட் பிரஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 2ம் திகதி ஆரம்பமாகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டின் நிமித்தம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா செல்கின்றார். அவர் மனித உரிமைகள் உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது யுத்தக் குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதன் பொருட்டும், அதற்கு ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்-

முடியுமாக இருந்தால் மகிந்த ராஜபக்ஷவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட செய்யுங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் முழு பொறுப்பாளியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாடுகிறார். அந்த கட்சியின் சின்னங்களாக இருந்த கை, வெற்றிலை மற்றும் கதிரை என்பவற்றின் உரிமைகள் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கே இருக்கின்றன. இந்நிலையில் மகிந்தவை எவ்வாறு அவர்கள் தேர்தலில் போட்டியிட செய்வார்கள்? சக்கர சின்னத்திலா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம் கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்த அரசை மாற்றறுவதற்காக சிலர் மகிந்தவை மீண்டும் போட்டியிட வைக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நுகேகொட கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே நினைக்கின்றேன். அவ்வாறு மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டாலும், நாம் எந்த தருணத்திலும் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கு முன்னர் மகிந்தவை எதிர்த்து தாம் ஒருமுறை போட்டியிட்டிருந்ததாகவும், அதன்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உதவியால் மகிந்த ராஜபக்ச அத் தேர்தலில் வெற்றிபெற்றார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சி பாதுகாப்பு சட்டத்தை உரிய வகையில் அமுலாக்கப்பட வேண்டும்-கூட்டமைப்பு-

சாட்சி பாதுகாப்பு சட்டத்தை உரிய வகையில் அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையையிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியடைகிறது. பாதுகாப்பு பற்றிய உறுதி இல்லாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வரவில்லை. ஆகவே இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதுடன் நிறுத்தப்படாமல், அது உரிய வகையில் அமுலாக்கப்பட வேண்டும் எ; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த சட்டமூலமானது கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கழிவு ஒயில் கலந்த பகுதிகளில் குடிநீரை விநியோகிக்க ஏற்பாடு-

யாழ்ப்பாணம் வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் சில கிணறுகளில் கழிவு ஒயில் கலந்திருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முதற்கட்டமாக இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சுற்றாடலில் வசிக்கும் மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கமைய கழிவு ஒயில் கலந்திருப்பதாக இனங்காணப்பட்ட இடங்களில் 04 தண்ணீர் தாங்கிகள் வைத்து குடிநீர் வழங்குவதற்குரிய ஒழுங்குகளை வலி. தென்மேற்குப் பிரதேசசபை மேற்கொண்டுள்ளது. முதன்முதலாக வலி. தெற்கு கிணறுகளில் காணப்பட்ட கழிவு ஒயில்படலம் நாளடைவில் வலி. வடக்கு கிணறுகளுக்கும் ஊடுருவி தற்பொழுது வலி. தென்மேற்கு வலிகாமம் மேற்கு ஆகிய பிரதேச கிணறுகளிலும் படிந்துள்ளது. வலி. தென்மேற்குப் பிரதேசத்திலுள்ள சுதுமலை வடக்கு, தெற்கு மானிப்பாய், மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள 28 கிணறுகளில் கழிவு ஒயில் கலந்திருப்பதாக சந்தேகப்பட்டதை அடுத்து சுதுமலை வடக்கு மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள இரு கிணற்று நீர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டது. மேற்படி இரு கிணறுகளிலும் உள்ள நீரில் கழிவுஒயில் கலந்திருப்பதாக பரிசோதனையில் உறுதியானதையடுத்து முதற்கட்டமாக இப்பகுதியைச் சூழவுள்ள சுமார் 80 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர் குறித்த பேச்சுவார்த்தையை பிற்போடுவதற்கு முயற்சி-

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சர் டிலிப் வெதஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. தமிழக மீனவர்களின் இழுவை படகுகளே இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினையாக காணப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அரசாங்கம் முன்வைத்த மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பேச்சுவார்த்தைய பிற்போடுவதற்கு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலைக்கு விஜயம்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை (23..02.2015) திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் சம்பந்தமாக அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் தெரிவு தொடர்பில் பெப்ரல் அறிக்கை-

அரசியல் கட்சிகள் தேர்தல்களுக்காக தங்களின் வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கை ஒன்றை பெப்ரல் அமைப்பு தயாரித்துள்ளது. இந்த அறிக்கை நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த மஹாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதாக பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யாமை உள்ளிட்ட 12 விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் 12ம் திகதி சகல அரசியல் கட்சிகளுக்கும் கையளிக்கப்படவுள்ளது என ரொஹன ஹெட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை-

சீகிரியா ஓவியங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிக்கு கண்ணாடி கவசங்களை இடுவதற்கு கலை மற்றும் கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்கள் இடுவது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட முகாமையாளர் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சீகிரியா ஓவியங்களின் பாதுகாப்பு தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஓவியங்களை சேதப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, ஓவியங்களுக்கு கண்ணாடி கவசங்களை இடுவதால் இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்த்துக் கொள்ளமுடியும் என மத்திய கலை நிறுவகத்தின் சீகிரிய செயற்றிட்ட முகாமையாளர் சந்தன வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்ப அரசியலை பின்பற்றப் போவதில்லை-ஜனாதிபதி மைத்திரிபால-

கடந்த அரசாங்கம் பின்பற்றிய குடும்ப அரசியலை தாம் பின்பற்றப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாகொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப மரம் அல்லது வனம் தமது கொள்கை இல்லை. முழுநாட்டையும் தமது கிராமமாகவும், அனைத்து மக்களையும் தமது உறவினர்களாகவுமே தாம் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

விசாரணை அறிக்கை கோரி யாழில் ஆர்ப்பாட்டம்-

சர்வதேச விசாரணை அறிக்கையை ஏற்கனவே வெளியிடுவதாக கூறப்பட்ட தினத்திலேயே வெளியிடுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ் பல்கலைக்கழக சமுகம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ் பல்கலைக்கழக ஆசியர்கள் ஒன்றியம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இதற்கிடையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தரம் இரத்தாகவில்லையென குற்றச்சாட்டு-

கடந்த கால அரசாங்கத்தினால் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவத் தரங்கள் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சராக பதவி ஏற்ற அகில விராஜ் காரியவசம், அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவத் தரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். எனினும் இதுவரையில் அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

வவுனியா ஏ9 வீதியில் தாண்டிக்குளம் விவசாயப்பண்ணை முன்பாக நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். துவிச்சக்கர வண்டியொன்றில் பயணித்தவரை, சொகுசு வாகனம் ஒன்று மோதிச் சென்றதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, சாஷ்த்திரிகூழாங்குளத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் பலியானதான தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியகல்லாறில் மிதிவெடி மீட்பு-

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மதிவெடியொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்றுக் காலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இதனைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த மிதிவெடி அவ்விடத்தில் கொண்டுவரப்பட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த களுவாஞ்சிகுடி பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்-

kanamat ponor thodarpil aarpaattam yaalil (4)காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், ஐ.நா விசாரணை அறிக்கையை பிற்போடாமல் மார்ச் மாதத்தில் வெளியிட வேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பஸ்நிலையம் முன்பாக இன்றுகாலை 10மணியளவில் ஆரம்பமான இப் போராட்டம் 11மணிவரை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக சத்திரசந்தியை அடைந்து, பின் காங்கேசன்துறை வீதி வழியாக உலக தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடம் முன்பாக சென்று போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தின் இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலர் செ.கஜேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் சி.பாஸ்கரா, தி.நிரோஷ் மற்றும் பிரேதசசபை உறுப்பினர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

kanamat ponor thodarpil aarpaattam yaalil (2)kanamat ponor thodarpil aarpaattam yaalil (6)kanamatponor thodarpil aarpattamkanamat ponor thodarpil aarpaattam yaalil (3)

100 நாள் திட்டத்தை செயற்படுத்த சகல கட்சிகளும் ஆதரவு-ஜனாதிபதி-

maithriமனித உரிமைகளை பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பை உருவாக்குவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்கும் விசேட கலந்துரையாடலில் நேற்று கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவத்துள்ளார். 100 நாள் திட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த செயற்றிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மக்களின் செலவுகளை குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த செயற்றிட்டத்தின் ஊடாக சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாஸ், மஹிந்தானந்த உள்ளிட்டவர்களின் சொத்துக்களை பரிசீலிக்க அனுமதி-

law helpவிளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியான சஜின் வாஸ்குணவர்தன, துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியாத் பந்து விக்ரம மற்றும் அவர்களின் உறவினர்கள் அறுவரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அரச, தனியார் மற்றும் 81 நிதிநிறுவனங்களில் விபரங்களை பெறவே கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ட, இரகசிய பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழே இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். பதவிகளை பயன்படுத்தி குறுகிய காலத்துக்குள் சேர்த்துகொண்ட சொத்துகள் மற்றும் நிதி விவரங்கள் தொடர்பில் பரிசீலனை நடத்தப்படும். வங்கி நிதி நிறுவனங்கள், இறைவரி திணைக்களம் மற்றும் காணி பதிவாளர் காரியாலயம் ஆகியவற்றிலேயேயும் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அதற்கும் நீதவான் அனுமதியளித்துள்ளார்.

வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற வர்த்தகர் கைது-

ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முற்பட்டதாக கூறப்படும் வர்த்தகரொருவரை இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்துள்ளனர். மேலும் இவரிடம் இருந்த 8.3 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 20,800 யூரோ, 17,300 பிரிட்டன் பவுண் மற்றும் 24,000 சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணங்களை அவருடைய பையில் மறைத்து வைத்திருந்துள்ளார். தற்போது குறித்த நபர் 1 மில்லியன் ரூபாய் ரொக்கப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டன்பார் தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து-

danbar thottam thee (1)நுவரெலியா, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், டன்பார் தோட்ட லயன் குடியிருப்பில் இன்றுகாலை 10.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 04 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. மேற்படி விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைதுள்ளதாகவும் இதன் காரணமாக வீட்டிலிருந்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த 4 வீடுகளிலும் குடியிருந்த 21 பேர் தற்போது தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டள்ளனர். மின்சார கோளறு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு மாகாண அமைச்சர் ராம் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார். இதுகுறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அரச ஊழியர்களின் நடவடிக்கையை ஆராய்வதற்குத் தீர்மானம்-

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலின் போது அரச ஊழியர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அரச ஊழியர்களின் நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல் நாட்களிலும் தேர்தலிற்கு முன்னைய தினங்களிலும் ஆராயவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர் நிமல் புன்ச்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் ரகசிய ‘கோத்தா முகாம்’ ததேகூ கேள்வி (BBC)

tna (4)இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த, காணாமல்போன, கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை
இலங்கையின் திருகோணமலை கடற்படை முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த முகாம் ‘கோத்தா முகாம்’ அழைக்கப்பட்டிருந்ததாகவும் கிடைத்த தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. Read more

மூன்று பிரதான அம்சங்களில் அரசியலமைப்பில் மாற்றம்-பிரதமர் ரணில்-

ranil01அரசியல் அமைப்பு பிரதான மூன்று அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தில் மாத்திரம் சில அதிகாரங்கள் அவருக்கு உள்ளவாறே வழங்கப்படும் என்றும் இதற்கு பல தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுயாதீனமாக விசாரணை நடத்த வேண்டும் – கமியுனிஸ்ட் கட்சி-

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில், இந்தியா சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மார்க்சிஸ்ட் கமியுனிஸ்ட் கட்சி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில், தமிழ் மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் இடம்பெற்றன. இது தொடர்பில் இந்தியா சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும். அதேநேரம், தமிழ் மக்களின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதற்கு, இந்திய அரசாங்கம் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த விடயங்களை வலியுறத்தி, அந்த கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.எஸ் இன் படுகொலை நடவடிக்கைக்கு இலங்கை கண்டனம்-

imagesCAAFRW6Nஎகிப்தில் கொப்டிக் கிறிஸ்த்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடுரமான முறையில் கொலை செய்தமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 15ம் திகதி, குறித்த 21 கிறிஸ்த்தவர்களையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்று தீ வைத்து கொலை செய்திருந்தனர். இந்த அடிப்படைவாத செயலை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெலிக்கடை படுகொலைக்கு கோத்தபாயவே பொறுப்பு-சரத் பொன்சேகா-

sarath fonsekaகொழும்பு, வெலிக்கடைச் சிறையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்திருந்ததுடன், 20க்கும் அதிகமான கைதிகளும், விசேட அதிரடிப் படையினரும் காயமடைந்தனர். சில கைதிகளை கொலை செய்யும் நோக்கில் கோத்தபாய ராஜபக்ஷ தனக்கு விசுவாசமான சில அதிரடிபடையினரை பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால அமெரிக்காவுக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ இதேவேளை மேற்கொள்வார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் செய்வாராயின், இலங்கை ஜனாதிபதி ஒருவர் 31 வருடங்களுக்கு பின் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன 1984ஆம் ஆண்டு ஜீன்மாதம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் 13ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

புதிய இராணுவத்தளபதி நியமனம், மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கம்-

1army_maithiriஇலங்கையின் 21வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மாங்குளம் பொலிஸ் பிரிவின்கீழ் இயங்கிய ஆறு பொலிஸ் நிலையங்கள் வேறு இரு பொலிஸ் பிரிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இரண்டு பொலிஸ் நிலையங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கும், நான்கு பொலிஸ் நிலையங்கள் வவுனியா பொலிஸ் பிரிவிற்கும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது ஏ9 வீதியில் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய இடர்களை தவர்க்கும் பொருட்டு மாங்குளம் பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாகவும், தற்கோது யுத்தம் நிறைவடைந்து குறித்த வீதியில் காணப்பட்ட போக்குவரத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாகத்தை இலகுபடுத்தும் வகையில் மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா செல்ல ஏற்பாடு-

mangalaஜெனீவாவில் இடம்பெறவுள்ள உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் மார்ச் 2ம் திகதி இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்மட்ட கூட்டத்தின் பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹ_ஸைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை குறித்து தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா மனித உரிமை ஆணையகம் பிற்போட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாகிஸ்தான் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு-

sri pakiஇலங்கை அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியா சென்றிருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க டெல்லியில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். பாகிஸ்தானுடன் உறவினை வலுப்படுத்திக் கொள்ளவென “தொழில்நுட்ப திறன் மற்றும் மனித திறமைகளை” உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கை எதிர்பார்த்துள்ளது. ரஸ்ய அரசுக்குச் சொந்தமான றொசாடொம் நிறுவனத்துடன் முன்கூட்டியே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவும் இலங்கை எதிர்பார்த்துள்ளது. ஆனால் அந்த நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பு கிடையாது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மூழ்கிய தோணியிலிருந்து பத்துப்பேர் மீட்பு-

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆற்றில் இன்றுகாலை தோணியொன்று கவிழ்ந்ததால், தோணியில் பயணித்த ஒரு வயதுச் சிறுவன் உட்பட 10 பேர்; மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு தேவைகள் கருதி நாசீவன்தீவு கிராமத்திலிருந்து வாழைச்சேனை நகருக்கு இவர்கள் தோணியில் பயணித்துள்ளனர். இதன்போது மேற்படி தோணி திடீரென்று கவிழ்ந்த நிலையில் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இவர்களின் கூச்சல் கேட்டு, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் நின்ற மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று ஆற்றில் மூழ்கியவர்களை காப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். காப்பாற்றப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விசாரணைகளின்; பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தங்களது பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள் ஆற்று நீரில் மூழ்கியுள்ளதாக காப்பாற்றப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைது-

இந்தியாவின் கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவிருந்த 101 கிலோகிராம் கொண்ட கஞ்சாப்பொதிகளுடன் நான்கு சந்தேகநபர்களை நேற்று யாழ். பண்டத்தரிப்பு பகுதியில் கைதுசெய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி.சில்வா இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மாதகல் துறைமுகம் ஊடாக கஞ்சா கடத்தி அதனை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில்; கும்பல் ஒன்று ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கஞ்சாப்பொதிகளை கடத்திச்சென்ற கண்டியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரத்தை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுமாக நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். வடி ரக வாகனத்திலிருந்து 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 45 கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, 2 முச்சக்கரவண்டிகள், ஒரு வடி ரக வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, இவர்கள் சுன்னாகத்திலிருந்து கொழும்புக்கு வாழைக்குலைகள் ஏற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது.

செயலதிபரின் பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடு, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-https://www.youtube.com/watch?v=-3sivNUubbo

plote uma1புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(Pடுழுவுநு), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(னுPடுகு) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால் “புறப்பட்ட புரட்சிப் புயலின் தலைவன் உமா மகேஸ்வரன், ஈழ விடுதலைப் போரினை இதயத்தில் சுமந்த விடுதலை சூரியன், எங்கள் உமா மகேஸ்வரன்” எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக வவுனியா பெரியமடு அம்பாள் வித்தியாலயத்துக்கான ஒருதொகை கற்றல் உபகரணங்கள் வித்தியாலய அதிபர் திரு த.அகிலன் அவர்களிடம் இன்றையதினம்(18ஃ02ஃ2015) கையளிக்கப்பட்டது. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு எஸ்.சஞ்சீவன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்விற்கான நிதியுதவியினை புளொட்டின் சுவிஸ் கிளை முக்கியத்தர்களுள் ஒருவரான தோழர் செல்வபாலன் அவர்கள் தனது குடும்பத்தினர் சார்பில் வழங்கியுள்ளதுடன், வீடியோ பாடல் வெளியீட்டு உதவி- புளொட் அமைப்பின் அமெரிக்கா, பின்லாந்து கிளையினர்  https://www.youtube.com/watch?v=-3sivNUubbo

IMG_6773 IMG_6783

பொன்னாலை, நாராயணன் மண்டபம் மற்றும் சனசமூக நிலையத்திற்கு விஜயம்-

ponnalaiponnalai2ponnalai1யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசளா திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பொன்னாலைச் சந்தியில் அமைந்துள்ள நாராயணண் தாகசாந்தி, அன்னதான மண்டபம் மற்றும் நாராயணன் சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கு புளொட் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜேர்மனி நாட்டிலிலுருந்து வருகை தந்திருந்த சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்) திருமதி. வசந்தி ஜெயகுமார் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வின்போது மேற்படி அமைப்புகளின் தலைவர் திரு ஆணந்த சித்திரசேனன் மற்றும் நிர்வாகத்தினர் இக் குழுவினரை வரவேற்றதுடன் தமது தேவைகள் தொடாடபில் கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த தைப்பொங்கல் தினத்தன்று கட்டப்பட்டட இக் கட்டடத்தின் சனசமூக நிலையத்தினை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.