Header image alt text

சுதுமலை மத்திய சனசமூக நிலைய ஆரம்ப விழா-

Sudumalai07மீள் புனரமைக்கப்பட்ட சுதுமலை மத்திய சனசமூக நிலையத்தின் ஆரம்ப விழா நேற்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வாசிகசாலையின் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. வாசிகசாலையின் தலைவர் இ.பேசின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின் விசேட விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திரு. முரளிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சின்மயா பாரதி வித்தியாலய அதிபர் ஆ.பேரின்பநாயகம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் சி.மகேந்திரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி கோ.ரக்கீ, கிராம உத்தியோகத்தர் ரி.தனபால, கிராம உத்தியோகத்தர் திருமதி ந.பிரபாகரன், மற்றும் முன்னைநாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திரு. கௌரிகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது சுதுமலைக் கிராமத்திலுள்ள முன்பள்ளிகளில் கல்விபயிலும் சிறுவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

வலி மேற்கு பிரதேசசபைப் பகுதிகளில் மகளீர் எழுச்சிவாரம்-

makaleer thinam2நேற்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் பிரதேச ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் மகளீர் எழுச்சி வாரத்தின் பொருட்டு எழுச்சி நாள் ஒன்றாகிய இன்றையதினம் வலி மேற்கு பகுதியில் உள்ள மாற்று வலு உள்ள பெண்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பிலான கருத்தமைவு நடைபெற்றது. இவ் நிகழ்வில் 50ற்கும் மேற்பட்ட மாற்று வலு உள்ள பெண்கள் கலந்து கொண்டனர் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு மாற்று வலு உள்ளவர்கட்கும் அன்பளிப்பாக சுகாதாரப் பொதிகள் வழங்கப்பட்டது. நேற்றுக்காலை 10 மணியளவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பி.ராஜ்குமார், நல்லூர் பிரதேச சபை உபதவிசாளர் திருமதி.கோமதி உலக தரிசன நிறுவனப் செயல்திட்ட பணிப்பாளர் அலெக்ஸ் மற்றும் கருவி நிறுவனத்தின் பணிப்பாளரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், Read more

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 28ஆவது அமர்வு-

human raightsஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 28ஆவது பேரவை அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன் பொருட்டு ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட அமர்வில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் உசைனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகம் இணங்கியுள்ள நிலையில் இன்றைய அமர்வு நடைபெறவுள்ளது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலிலிருந்து இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்-

LTAKஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா வைரவபுளியங்குளம் லக்சுமி திருமண மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசாங்கம் தீர்வு காணவேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்தியக்குழு கூட்டத்தின் போது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின்போது மத்தியக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாகாணசபை உறுப்பினர் திரு. துரைரட்ணசிங்கம் வாசித்தார்.

1. தமிழர்களின் காணிகளை மீள் கையளித்தல்
2. அரசியல் கைதிகளை விடுவித்தல்
3. காணாமல் போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி உடனடியாக இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது.
4. போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தல்.
5. இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில், புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும.
6. இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு அங்கிகரித்து ஏற்றுக்கொள்கின்றது எனவும் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய வெளியுறவமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை எதிர்வரும் 6ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள சுஷ்மா சு;வராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் தொடர்பில் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முன்னர், 1987ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதன் பின்னர், கடந்த 28 வருடங்களில் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும் எனவும் இந்தியச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிலையத்தை மேம்படுத்த அமெரிக்கா நிறுவனங்களுக்கு அனுமதி கோரல்-

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது. ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக, புதிய வசதிகள் மற்றும் தொழினுட்பங்களுடன் கொழும்பு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக தரத்திற்கு சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழினுட்ப உதவிகளை வழங்கும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தவிர, புத்தாக்க சக்திவலு உற்பத்தி மற்றும் சூரிய சக்தியுடனான மின்சார உற்பத்தி தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் குழப்பம்-

கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் மஹ{மூட் லெப்பை அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் மீறப்பட்டு தன்னிச்சையாக பதவிகள் கைமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏ.எல்;.எம்.அமீர், எஸ்.உதுமா லெப்பை, விமலவீர திசாநாயக்க, டப்ளியு.ஈ வீரசிங்க, ரி.எம்.ஜயசேன, ஜயந்த விஜேசேகர ஆகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே எதிர்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.

சஷீந்திர ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு-

தம்மை முதலமைச்சர் பதவிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என தெரிவித்து ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் எச்.பி.ஜே. மடவல ஆகியோர், ஷசிந்திர ராஜபக்ஷ சமர்ப்பித்த மனுவில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்து, அதனை நிராகரித்தனர்.

சீன விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள கடன்கள் பற்றி ஆராய்வு-

சீனாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவின் உயர்மட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். சீன பிரதமர் லீ கீயாங்க் மற்றும் வெளிவிவகார அமைச்சர் யங்க் யீ ஆகியோரை சந்தித்த அமைச்சர் மங்கள சமரவீர இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். இதுதவிர, கடந்த அரசாங்கத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் 100 நாள் செயற்றிட்டம் தொடர்பாகவும் சீன அதிகாரிகளுக்கு இந்த விஜயத்தின்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

யாத்ரீகர்களிடமிருந்து சக்திவாய்ந்த செய்மதி அலைவாங்கிகள் மீட்பு-

இந்தியா, தம்ப திவவுக்கு யாத்திரை சென்று அங்கிருந்து நாட்டுக்கு திரும்பிய யாத்ரீகர்களின் பயணப்பைகளில் இருந்து சக்திவாய்ந்த செய்மதி அலைவாங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் பெறுமதி 1.3மில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடுதிரும்பிய யாத்ரீகர்களிடமிருந்தே மேற்படி செய்மதி மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த யாத்ரீகர்களின் 11 பயணப்பைகளில் இருந்து 335 செய்மதி அலைவாங்கிகள், தூர இருந்து இயக்கும் கருவிகள் 81உம் மீட்கப்பட்டுள்ளன என சுங்கத்தினர் கூறுகின்றனர்.

திருமலையில் காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வு-

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான அமர்வுகள் இன்றும் நாளையும் திருகோணமலை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளன நேற்றையதினம் குச்சவெளியில் இடம்பெற்ற மேற்படி அமர்வில் 53 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 100 பேரின் சாட்சியங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன குச்சவெளி அமர்வில் புதிதாக 73 பேரின் சாட்சியங்கள் பதிவானதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். இதேவேளை குச்சவெளியில் இடம்பெற்ற அமர்வுகளின் போது சிலர் ஆணைக்குழுவின் அமர்வை புறக்கணித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி தேர்தல் ஆணையாளர் விசேட சந்திப்புக்கு ஏற்பாடு-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளது. என்று அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச தேர்தல் முறைமையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றம் தொடர்பிலான பரிந்துரைகளை அமுலாக்கம் செய்வது குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது அளிக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஒரு வாக்குறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு தடை-

மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணத்தினாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.