சுதுமலை மத்திய சனசமூக நிலைய ஆரம்ப விழா-
மீள் புனரமைக்கப்பட்ட சுதுமலை மத்திய சனசமூக நிலையத்தின் ஆரம்ப விழா நேற்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வாசிகசாலையின் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. வாசிகசாலையின் தலைவர் இ.பேசின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின் விசேட விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திரு. முரளிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சின்மயா பாரதி வித்தியாலய அதிபர் ஆ.பேரின்பநாயகம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் சி.மகேந்திரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி கோ.ரக்கீ, கிராம உத்தியோகத்தர் ரி.தனபால, கிராம உத்தியோகத்தர் திருமதி ந.பிரபாகரன், மற்றும் முன்னைநாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திரு. கௌரிகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது சுதுமலைக் கிராமத்திலுள்ள முன்பள்ளிகளில் கல்விபயிலும் சிறுவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,சனசமூக நிலையங்கள் சமூகங்களுக்கு உதவுகின்ற பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த சனசமூக நிலையத்தை எனக்கு நீண்டகாலமாகவே தெரியும். இந்த சனசமூக நிலையம் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. சிறுவர்களின் கல்வி உயர்ச்சிக்கு வாசிகசாலைகள், நூலகங்கள் என்பன முதுகெலும்புபோல் உறுதுணையாக இருந்து வருகின்றன. இவைகள் சிறப்புற வேண்டும். இதற்கான உதவிகளை நாங்கள் மேற்கொண்டு இதனை மிகவும் சிறப்பான ஒரு நூலகமாக மாற்றுவோம் என்றார்.