ஐ.நா மனிதவுரிமை கூட்டத் தொரில் அமைச்சர் மங்கள சமரவீர உரை-

mangala samaraweeraகடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பெருவாரியான வாக்கு வீதத்தில் தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். மோதல்கள் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டு மக்களும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். நாட்டின் புதிய அரசாங்கம், நாட்டு மக்களின் பேச்சுரிமை, ஜனநாயகம், ஊடக சுதந்திரம், உள்ளிட்ட மனித உரிமைகளை பாதுகாக்கும் இனப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சம உரிமை அளிப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த அரசாங்கம் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறி வந்தது. உலக மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆணையாளர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை கண்டறிந்து இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படும். மைத்திரி ஆட்சி பொறுப்பேற்று 48 நாட்களில் சமூக மக்களின் தனி உரிமைகளை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் வரையறுத்துள்ள மனிதவுரிமை சட்ட திட்டங்களை இலங்கையிலும் முழுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நம்பகமான உள்நாட்டு விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைப்புகளை மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தில் உலகத் தலைவர்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளையும் இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. மோதல்கள் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக இந்த மாகாணங்களுக்கு சிரேஷ்ட சிவில் அதிகாரிகள் இருவர் ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என மங்கள சமரவீர தனதுரையில் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்குக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். பர்மா, இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவர்களின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை ஊக்குவித்து உண்மையான மாற்றங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பங்காற்றியுள்ளது. அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை நிச்சயம் மாற்ற முடியும். எனினும் அது ஒரே இரவில் நடந்து விடாது. அழுத்தங்களின் மூலம் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும், சுதந்திரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.