தேர்தலில் பின் ஜனாதிபதி முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம்-

jaffna 1 jaffna 2 jaffna3ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், யாழ்ப்பாணத்திற்கான முதலாவது விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ளார். வட மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வட மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது-ஆணையாளர்-

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான 28வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துரையாடப்பட்டு பரிந்துரைக்கப்படும் விடயங்களை உலக நாடுகளின் பிரதிநிதிகள் கவனத்தில் எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தச் செய்வதன் மூலமே உண்மையான பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் சில நாடுகளால் அலட்சியம் செய்யப்படுவதுடன், தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன. உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சில தவிர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாக சிலர் கூறிக்கொள்கின்றனர். விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் ஐ.நா உறுப்பு நாடுகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்கள் குழு குறித்து சில நாடுகள் காண்பித்த அலட்சியம் மற்றும் அவமதிப்புத் தொடர்பில் கவலையடைகின்றேன். மனித உரிமை மீறல்கள் தன்னிச்சையாக உருவாக்கப்படுபவையல்ல. நாடுகள் தெரிவுசெய்யும் கொள்கைகளின் காரணமாகவே மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. சில நாடுகளின் கொள்கைகள் சுதந்திரம் மற்றும் பங்கெடுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என அவர் மேலும் கூறியுள்ளார்.

பொது உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே கடன் வழங்கப்பட்டது-சீனா-

பொது உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு பெருமளவிளான கடன் வழங்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் இந்த உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இலங்கை சீனாவிடம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சீன அரசாங்கத்துடன், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்பொருட்டு நீதியமைச்சரை பீஜீங் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காகவே கடனுதவி அளிக்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹ_வா ச்சுன்இன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் நன்மை கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது-

கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று நண்பகல் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் நால்வர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இந்த வகையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சராக கிழக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி அவர்களும், சுகாதார அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் அவர்களும் வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவத்தமி கலப்பதி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கட்டார் விபத்தில் இலங்கையர் இருவர் மரணம்-

கட்டாரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைசட சேர்ந்த இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். கோவில் போரதீவை சேர்ந்த ச.துவாரகன், பெரியநீலாவணையை சேர்ந்த ச.சுகந்தன் ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த காரும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மங்கள சமரவீர -அல் ஹ_சைன் சந்திப்பு-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹ_சைனை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தொடர்பிலான ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.