வவுனியா துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு-
வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாறம்பைக்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் 45வயதான வடிவேலழகன் (சண்ரிவி வடிவேலு) என்பவராவார். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் உணவகம் ஒன்றினை நடாத்திவரும் இவர் நேற்றிரவு உணவகத்தைப் பூட்டிவிட்டு சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல்முழுவதும் சூட்டுக்காயங்கள் காணப்படுவதுடன், இவரது கொலை தொடர்பில் விசாரணைகளை நடாத்திவருவதாக வவுனியா பொலிஸார் கூறியுள்ளனர். இவர் பல தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பேணிவருபவர் என்பதுடன், சில தமிழ்க் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உணவகம் நடாத்துவதற்கு முன்னர் சன் ரீ.வி மீள்ஒளிபரப்பு நிலையத்தை நடத்திவந்தார்.
முன்னாள் அமைச்சரிடம் விசாரணை-
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் றோஹித்த அபேகுணவர்தனவிடம் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பியினர். ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர். இதில் முன்னாள் அமைச்சர் றோஹன அபேகுணவர்தனவுக்கு எதிராகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டும் அவரிடம் ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்பாஸ் யுவதி மரணம் தொடர்பில் சந்தேகம்-
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து வீழ்ந்து 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த யுவதியின் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று புதுக்கடை 4 ஆம் இலக்க நீதிமன்ற நீதிவானினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த யுவதி தவறுதலாக மாடி வீட்டிலிருந்து வீழ்ந்துள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோது, யுவதி வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே மாடிவீட்டில் இருந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் விசாரணை-
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி முறைப்பாடு குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சுற்றாடல் அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு எதிராக கோட்டை இலங்கை வங்கி மாவத்தைக்கு முன்பாக நேற்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சிறைச்சாலை மோதல் தொடர்பில் வாக்குமூலம்-
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையினுள், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலை நேரில் கண்ட, அப்போதைய கைதியான சுதேஷ் நந்திமால் டி சில்வா என்ற நபர் நேற்று குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். அது தொடர்பாக முன் எடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே இந்த வாக்கு மூலம் பதியப்பட்டுள்ளது. சுமார் 2 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்கு மூலம் பெற்று கொள்ளப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 9 ஆம் திகதி தேடுதல் நடவடிக்கையின்போது, ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியானர். சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் சட்ட மற்றும் தொழிலுறவுகள் துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் விசாரணைகள் இடம் பெறுகின்றமை இங்கு குறிப்பிடக்கூடியது.
தலைகவசம் மீதான தடைக்கு எதிர்ப்பு-
முகத்தை முற்றாக மறைக்கும் தலைகவசம் அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பை வெளியிடுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார். இதற்காக, உந்துருளியை பயன்படுத்துபவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை, முன்னதாக எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர், முகத்தை முற்றாக மறைக்கும் தலைகவசம் அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக் கவசங்களுக்கு தடை விதிக்கப்படுமாயின் அதற்குமுன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடைகளுக்கு தடை விதிக்கப்படவேண்டும். என தெரிவிக்கும் பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் முகம்மூடிய முஸ்லிம் உடைகளுக்கு தடை விதிக்காதவரை யாரும் தலைக்கவச சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரிடம் வாக்குமூலம், ரோஹித்த,, லக்ஷ்மன் ஆகியோரிடம் விசாரணை-
கொழும்பு நாரஹென்பிட்டியிலுள்ள பொருளாதார நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை துறைமுக அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியுள்ளது. இது இவ்விதமிருக்க முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் வசந்த பெரேராவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்சவுக்கு எதிராக முறைப்பாடு-
நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கண்காணிப்பின் கீழிருந்த செலிங்கே வீடமைப்பு சங்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார்.