Header image alt text

மகளீர் எழுச்சி வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்-

vali west news (2)vali west news 3.vali west news (4)vali west news (7)நேற்று (04.03.2015) புதன்கிழமை வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்படடு வருகின்ற மகளீர் எழுச்சி வாரத்தின் 4ம்நாள் எழுச்சி நாள் 4 முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. ந.பி.இராஜ்குமார் மற்றும் சங்கானை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி ச.நதியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நேற்றைய இவ் எழுச்சி நாள் நிகழ்வானது பிரதேச ரீதியில் விதவைப் பெண்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் பிரதேச ரீதியில் விதவைகள் அமைப்பபை உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்ததது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உரையாற்றும்போது,  Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை-

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இவ்வறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட இருந்தபோதும் அது பிற்போடப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 18ஆம் திகதி இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் தமது அமர்வை நிறைவு செய்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தம்-

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமையவே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை இரத்து செய்வதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பணிகள் இடைநிறுத்தப்பட உள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன் தேர்தல் முறைமையில் மாற்றம்: ஜனாதிபதி-

அடுத்த தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரகொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான தனது உடன்பாட்டை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல்முறை மாற்றம் தொடர்பாக நவசம சமாஜகட்சி வலியுறுத்தல்-

புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும் போது, அதிகாரப் பகிர்வின் சமநிலை தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நவசம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்ற வேண்டியதில்லை. இதனை சிறுபான்மை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையிலான தேர்தல் முறைமை ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போதுள்ள முறையின்படி விருப்பு வாக்குத் தெரிவே சிக்கலாக இருக்கிறது. எனவே அதனை ரத்து செய்து, கட்சிகளே அவர்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய அடுத்த தேர்தல்-

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று நண்பகல் கருத்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமையவே, புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 300க்கும் அதிகமான வாகனங்கள் காணாமற்போயுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பாக ஜே.வி.பி குற்றச்சாட்டு-

மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களை மீண்டும் ஆட்சிக்கு அழைத்து வருவதற்கான அடித்தளத்தை, தேசிய அரசாங்கம் உருவாக்குவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று மகரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல்களால் மக்கள் அந்த அரசாங்கத்தை வெளியேற்றிவிட்டனர். ஆனால் தேசிய அரசாங்கத்தின் மூலம் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கப்படுகிறது. அவ்வாறான முயற்சிக்கு ஜே.வி.பி ஒத்துழைப்பு வழங்காது என்று அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றில் இந்திய பிரதமர் உரை-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 13ம்திகதி அவர் இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் இலங்கை நாடாளுமன்றத்திலும் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். இந்தியாவின் பிரதமர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன் 1987ம் அண்டு இந்திய பிரதர் ராஜிவ் காந்தி இலங்கை வந்திருந்தபோதும், அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கவில்லை. அத்துடன் நரேந்திரமோடி யாழ் விஜயத்தையும் மேற்கொள்வாரென் தரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமரின் இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுராஜ் நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதேநேரம் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்யை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்க உள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளைய தினம் இலங்கை வருகிறார். இந்நிலையில், அவரை சந்தித்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச அறிக்கை மேலும் வலுவடைய வேண்டும்-பிரித்தானியா-

இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார அ மைச்சர் ஹ{கோ ஸ்வைர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை இந்த மாதம் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கத்துக்கு வாய்ப்பினை வழங்கும் வகையில் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த அறிக்கை முன்வைக்கப்படும் போது, அது மேலும் வலுவாக்கப்பட்டிருக்க வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நவுறு தீவில் அகதி சிறார்கள் ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது-

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறு தீவில் சிறார்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான சிறார்கள் இதில் பங்கேறிருந்தனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கையால் தங்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுவதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். இதன்போது அனைத்து சிறார்களும் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.