பழைய தவறுகளை இலங்கை மீண்டும் செய்யக்கூடாது-மனித உரிமை ஆணையாளர்-
பழைய தவறுகளை இலங்கை மீண்டும் செய்யக்கூடாது என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹ_சைன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வில் அவர் சமர்ப்பித்த வருடாந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையில் தொடர்ச்சியாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கிலேயே அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. ஒரு தடவை மட்டுமே கிடைக்கின்ற இந்த வாய்ப்பை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கை அரசாங்கம் வழங்கிய பெருமளவு ஒத்துழைப்புக்கான சமிக்ஞை, புதிய தகவல்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே மேற்படி அறிக்கையை ஒத்திவைப்பதற்கான வேண்டுகோள் ஏற்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் செப்டெம்பரில் நடக்கவுள்ள அடுத்த அமர்வுக்கு முன்னர் தன்னையும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அதிகாரிகளையும் இலங்கைக்கு அழைக்க இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதையும் அவர் பாராட்டியுள்ளார்.
கட்சி உறுப்புரிமை இரத்தானமை குறித்து திஸ்ஸ உயர்நீதிமன்றத்தில் மனு-
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்தமை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இன்று அவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்திருந்தார். எனவே இவர் வசமிருந்த பொதுச் செயலாளர் பதவியை கபீர் ஹசீமுக்கு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது. அத்துடன் அவரை கட்சியில் இருந்து நீக்கவும் ஐ.தே.க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்தமையை இரத்துச் செய்யும்படி கோரியே திஸ்ஸ அத்தநாயக்க தற்போது உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெயகுமாரியின் விடுதலை தொடர்பில் ஆராய்வு-
புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெற உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான, பாலேந்திரன் ஜெயகுமாரியை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் பற்றி தெரியப்படுத்துமாறு நீதிமன்றத்தால், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஜெயக்குமாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுததுள்ளார். இதன்போது, அவரை விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபரின் எழுத்து மூலமான ஆலோசனை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் 10ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, சந்தேகநபரின் விடுதலைக்கான வாய்ப்புகள் பற்றி நீதிமன்றத்திற்கு அறியத் தருமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பகீரதியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி-
இலங்கை அதிகாரிகள், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட பகிரதியை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முருகேசன் ஜெயகனேஷ் பகிரதி எனும் 41 வயதான இவர், கடந்த திங்கட்கிழமை தனது எட்டு வயது மகளுடன் விமான நிலையத்திற்கு வந்திருந்த வேளை கைதுசெய்யப்பட்டார். பிரான்ஸில் வசித்து வந்த இவர் அண்மையில் தனது தாயைப் பார்க்க இலங்கை வந்து பின் திரும்பிச் சென்றவேளையே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்வோம் என நம்புகிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கiயின் முன்னேற்றத்திற்கான ஆதாரங்கள் எதிர்பார்ப்பு-
இலங்கையில் மறுசீரமைப்பு, மனித உரிமை அபிவிருத்தி மற்றும் பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் ஏற்படுகின்ற முன்னேற்றங்களுக்கான ஆதாரங்களை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நேற்றையதினம் இலங்கை தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர், அமெரிக்காவின் பிரதிநிதிகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை வெளியாக்கப்படும் என அமெரிக்கா நம்புகின்றது. இதன்போது இலங்கை அரசாங்கம் உறுதியளித்த விடயங்களும் அமுலாக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களும் முன்வைக்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை விடயத்தில் சீனா நம்பிக்கை-
சீனா இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் சீரான முறையில் தீர்க்கப்படும் என நம்புவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார பேச்சாளர் ஹ{வா சின்யுங் இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவுடனான ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று, அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது கொழும்பு துறைமுக நகரின் வேலைத்திட்டம் குறித்த மீளாய்வு பணிகளின் பின்னர், இந்த முதலீட்டு செயற்பாடு மீண்டும் முன்னெடுக்கப்படும் என்று நம்புவதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம்-
எலிசபெத் மகாராணியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 7ஆம் திகதி சனிக்கிழமை பிரித்தானியா பயணமாகவுள்ளார். நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா பயணிக்கும் ஜனாதிபதி மகாராணியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் .அதனையடுத்து இடம்பெறும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ள ஜனாதிபதி 9ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார். பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது பிரித்தானிய விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அனந்தி சசிதரன் உண்ணாவிரத போராட்டம்-
காணாமல் போனோரை மீட்டல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகளை மீளளித்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும் என தெரிவித்தே அவர் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலைமுதல் இந்த சூழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நீதியான சர்வதேச போர்க்குற்ற விசாரணை உடனடியாக வேண்டும், காணாமல் போனோரை கண்டுபிடித்து தர வேண்டும். இளம் விதவை பெண்களின் அவல கண்ணீருக்கு என்ன பதில், ஐ.நாவே எங்கள் கண்ணீரை அறியாயோ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு உண்ணாவிரதத்தினை முன்னெடுத்துள்ளனர். சூழற்சி முறையிலான இந்த உண்ணாவிரத போராட்டமானது எதிர்வரும் மகளீர் தினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜோன்ஸ்டன் மற்றும் குரேயிடம் வாக்குமூலம், அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது முறைப்பாடு-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரின் சொத்துக்கள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் இன்று வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய அரசாங்க அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள்குழு ஒன்றினால் இந்த முறைப்பாடு மெற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார், முசலி பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியேற்றியமைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மூன்று மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
யோசித்த கடற்படை தலைமையகத்துக்கு மாற்றம்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்ட லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படை தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவுக்கு தன்னை மாற்றுமாறு கடந்த மாதம் 12ஆம் திகதி லெப்டினன் ராஜப்ஷ கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான அனுமதி கடற்படையினால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவரை மீண்டும் கடற்படைத் தலைமையகத்துக்கு மாற்றம் செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக சில்வா தெரிவித்தார். அவரது சேவையின் தேவை அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம், தாதியர்களின் போராட்டம்-
திருகோணமலை நகரில் இன்று மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. நிலாவெளி, குச்சவெளி, இறக்கண்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பிரசன்னத்தாலும் அவர்கள் பயன்படுத்துகின்ற தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளாலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் சுகாதார சேவையாளர்களின் கொடுப்பனவுகள் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்க தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 12ம் திகதி காலை 7 மணிமுதல், 24 மணித்தியாலங்களுக்கு அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கம்பனிகளுக்கு அழைப்பு-
இந்தியாவுடனான கூடுதல் நெருக்கமானது பொருளாதார உறவுகளுக்கான சமிக்ஞை என்று கருதும் வகையில் இலங்கை, பல உயர்மட்ட இந்திய கம்பனிகளை பெரிய செயற்றிட்டங்களில் குறிப்பாக உற்பத்தித்துறையில் கூட்டு முயற்சிகளில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளது. இந்திய பிரதமர் இலங்கை வரும்போது இவை அறிவிக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கு டயர் உற்பத்தி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்ற உற்பத்திகள் பொருத்தமானவை என அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.