Header image alt text

இந்திய வெளியுறவமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர சந்திப்பு-

sushma_dinner01இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல், கலாச்சார ரீதியாக பின்னிப் பிணைந்தவை, என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்த இராப்போசன விருந்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும். இது இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது எனவும் சுஷ்மா இதன்போது கூறியுள்ளார். இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றிகரமாக அமைந்ததாகவும் சுஷ்மா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சாதாரண பயணிகள் விமானத்தில் லண்டன் பயணம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை 10 மணியளவில் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே. 651 விமானத்தில் அவர் டுபாய் நோக்கிப் பயணித்து லண்டனுக்கு பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி, சாதாரண பயணிகள் விமானத்திலேயே பயணித்துள்ளார். அவருடன் 6 பிரதிநிதிகளும் லண்டன் நோக்கிப் பயணமாகியுள்ளனர். லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார். இதேவேளை அவர் லண்டனில் வைத்து, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சுஸ்மாவுடன் மலையக தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை-

sushmaஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் காணப்படுகின்ற இடைவெளிகளை தீர்ப்பதற்காகவே தாம் இலங்கை வந்திருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஓன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையிலும், இந்தியாவிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது. இது இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவிலும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். நேற்றையதினம் இலங்கை வந்துள்ள சுஸ்மா சுவராஜ், ஜனாதிபதி உள்ளிட்ட பலரையும் சந்தித்திருந்தார். இன்று அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். மேலும் இன்றுமாலையில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் மலையகத்தின் அரசியல் தலைவர்களையும் அவர் இன்றுமாலையில் சந்திக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு-

முல்லைத்தீவு விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் 5 வயது சிறுவன், இன்று கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த விமலன் அபிஷேக் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், குறித்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில், தாயார் சமையலில் ஈடுபட்டுள்ளார். சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கையில் தவறுதலாக பாதுகாப்பற்ற கிணற்றினுள் விழுந்துள்ளான். உயரிழந்த சிறுவன் குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை எனவும் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயகுமாரியின் பிணை மனு ஒத்திவைப்பு-

rajakumariபுலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரனுக்கு பிணை வழங்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கொழும்பு நீதவான், மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருக்கின்ற இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவது பற்றிய அவரின் கருத்தை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதவான், சட்டமா அதிபருக்கு பணித்தார். பொலிஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்கிற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஜெயக்குமாரியின் வீட்டில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு கருவியொன்று இருந்ததாகவும் புலனாய்வு பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவும்-ஜப்பான் அமைச்சர்-

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜப்பான் தயார் என, அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மினோறு கியுச்சி தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று நாட்டுக்கு வந்த இவர், இன்று காலை ஜனாதிபதியை சந்தித்தவேளையே இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. நீண்டகாலமாக அபிவிருத்தி சார்ந்த உதவிகளை வழங்கி வரும் ஜப்பான், சர்வதேச அரங்கிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

இந்தியப் பிரதமர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார்-

Modi 2இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இதுதொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், 14ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தியப் பிரதமரை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்று நடத்தப்படும். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படையினரால் பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். பின்னர், இந்தியப் பிரதமர், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளிக்கும் மதியபோசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார். இலங்கை நாடாளுமன்றத்திலும்; இந்தியப் பிரதமர் சிறப்பு உரையாற்றுவார். இதேவேளை, இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதி காக்கும் படையினருக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவார். இந்தியப்பிரதமர், அநுராதபுரம், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார். அநுராதபுரத்தின் மஹாபோதியை அவர் தரிசனம் செய்வார். யாழ்ப்பானத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்தியநிலையத்தை மக்களின் பாவனைக்காக கையளிப்பார். அதுமட்டுமன்றி இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளில் சில வீடுகளையும் அவர் பயனாளிகளிடம் கையளிப்பார். மன்னார் விஜயத்தின் போது, கொழும்பு – மதவாச்சி ஊடாக தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்ய முடியாது – பிரதமர்-

ranil012005ம் ஆண்டு தாம் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், 2009ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பணத்தை வழங்கி, 2005ம் ஆண்டு தேர்தலில் வடக்கு மக்களை வாக்களிக்கவிடாமல் செய்தார். இதன் காரணமாகவே அவர் ஜனாதிபதியாக தெரிவானார். பணத்தை பெற்ற அமிர்காந்தன் என்பவர் இன்னும் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார். இவ்வாறு வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க தடுக்காமல் இருந்திருந்தால், மகிந்த ராஜபக்ஷ என்ற ஜனாதிபதி இருந்திருக்கமாட்டார். தமிழ் மக்களும் அழிவுகளை சந்தித்திருக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இறுதி யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. சீனாவும் பல ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. ஆகவே இரண்டு நாடுகளும் தங்களுக்கு முக்கியமானது. ஆனால் சீனா இலங்கை உறவினால் இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழக மீனவர்களின் பிரசன்னத்தால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் ஒருவரை சுட்டுக் கொல்வதற்கு தமக்கு சட்டத்தில் இடமிருக்கிறது. Read more