இந்தியப் பிரதமர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார்-
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இதுதொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், 14ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தியப் பிரதமரை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்று நடத்தப்படும். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படையினரால் பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். பின்னர், இந்தியப் பிரதமர், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளிக்கும் மதியபோசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார். இலங்கை நாடாளுமன்றத்திலும்; இந்தியப் பிரதமர் சிறப்பு உரையாற்றுவார். இதேவேளை, இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதி காக்கும் படையினருக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவார். இந்தியப்பிரதமர், அநுராதபுரம், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார். அநுராதபுரத்தின் மஹாபோதியை அவர் தரிசனம் செய்வார். யாழ்ப்பானத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்தியநிலையத்தை மக்களின் பாவனைக்காக கையளிப்பார். அதுமட்டுமன்றி இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளில் சில வீடுகளையும் அவர் பயனாளிகளிடம் கையளிப்பார். மன்னார் விஜயத்தின் போது, கொழும்பு – மதவாச்சி ஊடாக தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.