வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்ய முடியாது – பிரதமர்-

ranil012005ம் ஆண்டு தாம் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், 2009ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பணத்தை வழங்கி, 2005ம் ஆண்டு தேர்தலில் வடக்கு மக்களை வாக்களிக்கவிடாமல் செய்தார். இதன் காரணமாகவே அவர் ஜனாதிபதியாக தெரிவானார். பணத்தை பெற்ற அமிர்காந்தன் என்பவர் இன்னும் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார். இவ்வாறு வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க தடுக்காமல் இருந்திருந்தால், மகிந்த ராஜபக்ஷ என்ற ஜனாதிபதி இருந்திருக்கமாட்டார். தமிழ் மக்களும் அழிவுகளை சந்தித்திருக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இறுதி யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. சீனாவும் பல ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. ஆகவே இரண்டு நாடுகளும் தங்களுக்கு முக்கியமானது. ஆனால் சீனா இலங்கை உறவினால் இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழக மீனவர்களின் பிரசன்னத்தால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் ஒருவரை சுட்டுக் கொல்வதற்கு தமக்கு சட்டத்தில் இடமிருக்கிறது. அதுபோலவே இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைகின்ற யாராக இருந்தாலும் அவர்களை இலங்கையின் கடற்படையினர் சுடுவார்கள். அது நியாயமான விடயம். தமிழக மீனவர்கள் எதற்காக இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைய வேண்டும்? கடந்த காலங்களில் யாழ்ப்பாண மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட அனுமதித்திருக்கவில்லை. அதனால் தமிழக மீனவர்கள் அந்த வளத்தை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் வடக்கு கடலை நம்பி இருக்கிறது. எனவே அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையிலான தீர்வுகள் எதனையும் தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இனவழிப்புக்கு எதிரான பிரேரணை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடமாகாண முதலமைச்சருடன் தொடர்பாடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்