சர்வதேச மகளிர் தினம்-
சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி தான் உலக மகளிர் தினம் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனையடுத்து, உலகெங்கும் பெண்கள் உரிமைக்காக போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தது. பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை-
வெளிநாடுகள் பலவற்றுக்கான புதிய ராஜதந்திரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக 29 புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசாங்கத்தின்போது அரசியல் ஆதரவுடன் பலருக்கு ராஜநத்திர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறான நியமனங்களை ரத்து செய்து, புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா மேலும் கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்-
பிரதி காவற்துறை மா அதிபர்கள் நான்கு பேர் உள்ளிட்ட 23 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இன்றுடன் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த இடமாற்றங்களின் படி, காவற்துறை நலத்துறை பிரிவில் இருந்த பிரதி காவற்துறை மா அதிபர் வீ.இந்திரன் திருகோணமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு-
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தமது நாடு தயார் என ஜப்பான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மினோரு கியுஜி தெரிவித்துள்ளார். இன்றுகாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜப்பானின் சிறந்தவொரு நட்பு நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மினோரு கியுஜி ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவை சந்தித்துள்ளார். இதன்போது, ஊடக சுதந்திரம், இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
10 தொடருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த ஏற்பாடு-
நாட்டில், தெரிவு செய்யப்பட்ட 10 தொடருந்து நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறந்த செயற்திட்டமாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பின்னர், நாட்டின் ஏனைய சிறிய தொடருந்த நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் ஊடாக நவீனமயப்படுத்தப்படவுள்ள தொடருந்து நிலையங்களுக்கு, நவீன ரக தொழில்நுட்ப கட்டமைப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு கோட்டை, மருதானை, நீர்கொழும்பு, நானுஒயா, யாழ்ப்பாணம், ஹட்டன், கம்பஹா, ராகமை, அனுராதப்புரம் மற்றும் பொலனறுவை ஆகிய தொடருந்து நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.
திருமலை வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு-
திருகோணமலை யான் ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி நேற்றிரவு 7.50 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரொட்டவௌ பகுதியைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. பலியானோரின் சடலங்கள் ஹொரவபொத்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
கும்புறுப்பிட்டியில் படகு தீக்கிரை-
திருகோணமலை குச்சவெளி கும்புறுப்பிட்டி கடற்கரைப்பகுதியில் மீன் பிடிப்படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெளி மாவட்ட மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டது. படகு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.