கோட்டபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடைவிதிப்பு-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு இன்று காலை 10.33முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. காலி பிரதான நீதவான் நிலுபீலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகியோருக்கும் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் சரத் பொன்சேகா மற்றுமொரு வழக்கிலிருந்து விடுதலை-
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளரான சேனக்க ஹரிப்பிட்டிய என்பவரையும் குற்றமற்றவர் என இனங்கண்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையைத் தேடும் பணி தீவிரம்-
மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை நில்வல நீர்வீழ்ச்சியில் நீராடிகொண்டிருந்த போது காணாமல்போன பிரித்தானிய பிரஜையை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு பிரஜையொருவர், நில்வல நீர்வீழ்ச்சியில் விழுந்து காணமல் போயுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பிரித்தானிய பிரஜையான டிமோனி ஜொல் ஜோன்(வயது23) என்பவரே காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் இருவர், வெளிநாட்டு பெண் பிரஜைகள் இருவர் மற்றும் இலங்கையரொருவருடன் சுற்றுலாவந்த குழுவினர். நில்வல நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர். இதன்போது நீர்வீழ்ச்சியில் மூழ்கி தத்தளித்த அமெரிக்க பிரஜையான பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டு இறத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, காணாமல்போன பிரித்தானிய பிரஜையை தேடும் பணிகளை தலாத்துஓயா கடற்படை முகாமின் உதவியுடன் இறத்தோட்டை மற்றும் தம்புள்ளை பொலிஸ் நிலையங்களின் உயிர்காப்பு படையினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை பெண் ஊடகவியலாளர்களுக்கு பாலியல் தொல்லை-
இலங்கையில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்களில் 29 சதவீதமானோர் பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள ஆய்வொன்றை அடிப்படையாக வைத்தே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆய்வை நடத்தியுள்ள தில்ருக்ஷி ஹந்துனெத்தி, 45 பெண் ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பில் தகவல்களை சேகரித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர்(28.8வீதம்) தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுத்துள்ளமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் இவ் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவது இல்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சம்பவங்களின் போது சக ஊழியர்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்பு கிடைப்பது இல்லையெனவும், மேலும் முறைப்பாடுகள் நிறுவனத்தினால் அலட்சியம் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது,
இந்திய பிரதமர் இலங்கை செல்லவேண்டாமென நாராயணசுவாமி வலியுறுத்தல்-
இந்திய மீனவர்கள் தொடர்பாக இலங்கை பிரதமரின் கருத்து வெளிப்பாட்டை காரணம் காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது விஜயத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசுவாமி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி நுழையும் பட்சத்தில் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜிடம் தெரிவித்திருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அயல் நாடுகளுடன் சிறந்த உறவை பேணுவதற்கு எண்ணம் கொண்டுள்ள தருணத்தில் இவ்வாறான கருத்துக்கள் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் சில அழுத்தங்கள் மற்றும் அதன் வலுவான செயற்பாடுகள் காரணமாக இலங்கை மக்களில் பலர் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இதுதவிர, இருதரப்பிலும் மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றபோது இடம்பெறுகின்ற கைதுகள் தொடர்பாகவும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசுவாமி எடுத்துரைத்துள்ளார்.
விமல் வீரவங்சவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்றையதினம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. சொத்துக்கள் மற்றும் ஊழல்கள் குறித்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்றுமுற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார், சொத்து மற்றும் ஊழல் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய விமல் வீரவஞ்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களத்திற்கு சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு தொடரூந்து பாதையின் இரட்டை வழி-
வடக்கு தொடரூந்து பாதையின் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரட்டை தொடரூந்து பாதையை அமைப்பதற்கு தொடரூந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய அமரதுங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். குருணாகலையிலிருந்து, பொல்கஹாவெல வரையான பகுதியில் குறித்த இரட்டை தொடரூந்து பாதையை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வடக்கு தொடரூந்து பாதையை பயன்படுத்துவதன் காரணமாக பாரிய தொடரூந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தலைமன்னாருக்கான தொடரூந்து பாதை உட்பட வடக்கிற்கான பிரதான தொடரூந்து பாதையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அவசர நிலையாக கருதி இந்த வருடத்திலேயே இரட்டை தொடரூந்து பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
29 புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை, மத்திய வங்கி மோசடி விசாரணை-
வெளிநாடுகள் பலவற்றுக்கான புதிய ராஜதந்திரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக 29 புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் போது அரசியல் ஆதரவுடன் பலருக்கு ராஜதத்திர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறான நியமனங்கள் யாவும் இரத்து செய்யப்படும் என்றும் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு மூவர் அடங்கிய குழுவை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரஜையை தேடுதல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு-
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல பிரதேச கடற்கரையில் நீராடிகொண்டிருந்த இந்திய பிரஜையான அபிஷேக் ஜஸ்வான்ட் படேல்( வயது 20) என்பவரை காணவில்லை என்று ஏத்துகல சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 5.30 மணியளவில் காணாமல் போன இவரை தேடும் நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகவும் சுற்றுலா பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரை உடனடியாக பதவி விலகுமாறு கோரி, பேராசிரியர்கள் உபவேந்தரின் காரியாலயத்தை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர். உப-வேந்தரை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் அவர் இதுவரையிலும் பதவி விலகவில்லை என்றும் இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.