ஜெயகுமாரி பாலேந்திரன் பிணையில் விடுதலை-

rajakumariபுலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே ஜெயகுமாரியை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர், 362 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருக்கின்ற இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவது பற்றிய அவரின் கருத்தை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதவான், சட்டமா அதிபருக்கு கடந்த 6ஆம் திகதி பணித்திருந்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்கிற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்க முயற்சித்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைதாகி, தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 சந்தேகநபர்களில் 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

 மனிதவுரிமை மீறல்கள் குறித்த பொறுப்பு கூறலை டேவிட் கெமரூன் வலியுறுத்துவார்-

david_cameronஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு வலியுறுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் இந்த விடயத்தில் ஊக்கப்படுத்தவுள்ளதாக டேவிட் கெமரூன் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது வடக்கில் தாம் சந்தித்த மக்களின் கஷ்டங்களை மறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அதில் மாற்றம் ஏற்படவேண்டும் என டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டியுள்ளார். இப் பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பிலும் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

கொள்கை திட்டமிடல்குழு தலைவியாக சந்திரிகா நியமனம்

chandrikaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தி புதிய திட்டமிடலின் கீழ் செயற்படுத்துவதற்காகவே இந்த கொள்கை மற்றும் திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இக்குழு ஆராயும் என்றும் எஸ்.எம்.ஆரியசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கு ஒத்திவைப்பு-

காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் கடந்த 2ஆம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது அவர், இந்த வழக்கை நேற்று 9ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், அவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணையை மார்ச் 12ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார். இதேவேளை, காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகிய நால்வரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சட்டத்தை மீறியதாக அவுஸ்திரேலியாமீது குற்றச்சாட்டு-

அகதிகளுக்கான சர்வதேச உடன்படிக்கையையும், சட்டத்தையும் அவுஸ்திரேலியா மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அகதிகள் நடத்தப்படும் விதம் சித்திரவதைகளுக்கு ஒப்பான முறையில் அமைந்திருப்பதாகவும், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயற்பாடாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியா மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை வெளிவந்து ஒரு மாதத்திலேயே ஐ.நாவின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இதேவேளை, அடைக்கலம் கோரி வருபவர்களை அவுஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐ.நாவின் சித்திரவதைகளுக்கான சிறப்புத் தூதுவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தம்மை அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவுஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்திரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக ஐ.நா சபை குறிப்பிட்டுள்ளது. மனுஸ் தீவுகளில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களின் நிலை குறித்து மனித உரிமைக் குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், 60 நாடுகளில் இடம்பெறும் சித்திரவதைகள் குறித்து சிறப்புத் தூதுவர் ஜோன் மெண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். போதுமான அளவுக்க தடுப்பு முகாம் வசதிகளை மேற்கொள்ளாமை, சிறார்களை தடுத்து வைத்தல், மனுஸ் தீவுகளில் வன்செயல்கள், மனித நேயமற்ற வகையிலான நடத்தைகளை தடுக்க தவறியமை ஆகியவை குறித்து ஆஸி அரசுமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.

 சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடையாது-நிதியமைச்சர்-

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இது குறித்து ´சவுத் சைனா மார்னிங் போஸ்ட்´ என்ற ஹாங்காங் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை. இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான், ஏதாவது ஆவணங்கள் இருந்தால் அதைச் சமர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த நிறுவனம் ஏனைய நாடுகளில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தியப் பெருங்கடலில் குதித்து, அதை நிரவ முடியாது. இதுபோன்ற திட்டங்கள் குறித்து நாங்கள் சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. சீனாவுடனான எமது உறவுகள் 1950களை நோக்கிப் பின்சென்றுள்ளது. வேறெந்த முதலீடுகளையும் விட சீனாவின் முதலீடு நல்லது. ஆனால் அதற்காக அவர்களுக்கு முன்னுரிமை வசதிகளை அளிக்க முடியாது. முன்னைய அரசாங்கம் வழங்கியது போன்ற சலுகைகளைக் கோரிக் கொண்டு நீங்கள் இங்கு வரமுடியாது. இவை சீனாவின் முதலீடுகள் இல்லை. இவை கடன்கள். இவற்றை திருப்பிச் நாங்கள் செலுத்த வேண்டும். எமது அரசாங்கம் இந்த கடன்கள் தொடர்பாக சீனாவுடன் மீளப் பேச முயற்சிக்கிறது. நாங்கள் சீனாவிடம் கேட்பது என்னவென்றால், தயவுசெய்து எமக்கு உதவுங்கள் என்பதைத் தான். புதிய அரசாங்கம் சீனாவை மட்டும் இலக்கு வைத்துச் செயற்படவில்லை. முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு சீனா உதவ வேண்டும். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஊழலை ஒழிக்க எதைச் செய்தாரோ, அதையே தான் இலங்கையும் செய்ய முயற்சிக்கிறது. நாம் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல் உடன்பாடுகளைச் செய்து கொண்ட சீன நிறுவனங்களுக்கு எதிரானவர்கள். அவை வரி செலுத்துவோரின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இங்குள்ள சீன நிறுவனங்களின் செயற்பாடுகளை சீன அரசாங்கம் அறியாமல் இருந்திருக்கக் கூடும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.