இலங்கையில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது-ஐ.நா-சபை-
கடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நன்மை அடையக்ககூடிய அளவு சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளதென ஐ.நா செயலாளர் நாயகத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார். ஐ.நா சபை தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெப்ரி பெல்ட்மென், இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். யுத்தக் குற்றம் குறித்து இலங்கையரசு சர்வதேச தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இலங்கையில் நல்லிணக்க ஒத்துழைப்பு குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக ஜெப்ரி பெல்ட்மென் நேற்றைய ஊடக சந்திப்பில கூறியுள்ளார். ஆனாலும் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவ குறைப்பு, காணி மீள ஒப்படைப்பு போன்ற விடயங்களில் இலங்கையரசுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜெப்ரி பெல்ட்மென் கூறியுள்ளார். இலங்கையில் வடக்கு பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐ.நா சபை உதவத் தயார் என்றும் அது இலங்கை மக்களுக்கு நன்மையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சுஷ்மாவிடம் வருத்தம் தெரிவிப்பு-
தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லும்போது அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ´எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் அனுமதி அளிக்கிறது´ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், மீனவர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், டெல்லியில் மக்களவை உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை நேற்று எழுப்பினர். அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசும்போது, ´´தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளும் அடுத்தவரது மீனவர்களை சுட்டுக்கொல்வது உரிய தீர்வு அல்ல. கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த நான், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது, அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர், தமிழக மீனவர்களையும், கேரளாவில் மீனவர்களை சுட்டுக்கொன்று கைதுசெய்யப்பட்ட இத்தாலி கப்பல் மாலுமிகளையும் ஒப்பிட்டு இருப்பது சரியல்ல என்றும் அவரிடம் கூறினேன். அதற்கு, தான் உண்மை நிலவரம் தெரியாமல் பேசி விட்டதாகவும், அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பணம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, சிறப்பு திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு உருவாக்கும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறும்வரை, இந்தப் பிரச்சினை மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும்” என்றார்.
சஜின் வாஸ், பிரியந் பந்துவிக்ரம ஆகியோரது மனைவியரிடம் வாக்குமூலம்-
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பி.யும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை சமூகமளிக்கவில்லை சுகயீனம் காரணமாக தன்னால் இன்று சமூகமளிக்க முடியாது என்று அவர், அறிவித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவருடைய மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த பந்துவிக்ரமவின் மனைவியிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று வாக்குமூலம் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக முறைப்பாடு-
மத்திய வங்கி ஒப்பந்த பத்திர மோசடி குறித்து லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளனர். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தனது மருமகனின் நிறுவனத்திற்கு லாபமீட்டும் வகையில் மத்திய வங்கி கடன் தொடர்பில் ஒப்பந்த பத்திரம் கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூவர் அடங்கிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கொழும்புக்கான போக்குவரத்தில் மாற்றம்-
கொழும்பின் சில பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தையொட்டியே இந்த மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன. “இவ்விரு நாட்களிலும் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்தும் வகையிலேயே இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்” என பதில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
திஸ்ஸவுக்கு எதிரான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி., கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த போலி ஆவணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்களே சட்டமா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரின் இந்த விசாரணை ஜூன் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மடுவுக்கான பரீட்சாத்த தொடரூந்து சேவை-
தலைமன்னாருக்கான பரீட்சார்த்த தொடரூந்து சேவை இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மதவாச்சியில் இருந்து மடுவிற்கு வந்த தொடருந்து, அங்கிருந்து தலைமன்னாருக்கு பயணித்துள்ளது. சுமார் 26 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு தீவு பகுதிக்கு தொடரூந்து சேவை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பித்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய பிரதமர் எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மடுவிற்கான தொடரூந்து சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அதனை முன்னிட்டே இன்று இவ்வாறு மடுவிற்கான பரீட்சாத்த தொடரூந்து சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் அதிகாரிகள் 34 பேருக்கு இடமாற்றம்-
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர், பொலிஸ் அதிகாரிகள் மூவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 21 பேர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எழுவர் அடங்களாக 34 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சேவைகளின் தேவைகள் என்ற அடிப்படையிலேயே இந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் சமாதானம், கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தலைமை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சுதந்திரக்கட்சி எதிர்க்கும்-நிமல்-
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றுமுற்பகல் நடைபெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.