Header image alt text

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்-(படங்கள் இணைப்பு)

IMG_7521வவுனியாவில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்தும் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (11.03.2015)புதன்கிழமை காலை மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடிய வீட்டுத்திட்டம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து ஏ9 வீதி வழியாக ஊர்வலமாக சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். Read more

வலி மேற்கில் எழுச்சியுடன் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்-(படங்கள் இணைப்பு)

m00கடந்த 08.03.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபையில் மிகுந்த எழுச்சியுடன் சர்வதேச மகளிர் தினம். இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் காலை 10.00 மணியளவில் வலிமேற்கு பிரதேச சபை கலாசசர மண்பத்தில் வேள்ட் விசன் நிறுவன அனுசரணையுடன் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக சங்கானை பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலர் திருமதி. கிருஸ்ணவதனா செந்தூரன், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி. றதினி காந்தநேசன், சங்கானைப் பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. சாந்தா மரியாம்பிள்ளை, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், சமூகசேவகியும் சமாதான நீதவானுமாகிய திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி, வலிமேற்கு பிரதேசத்தின் சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் செல்வி. லீலாவதி மாரிமுத்து, பிரபல சட்டத்தரணியும் நொத்தரிசும் ஆகிய செல்வி. சாருஜா சிவநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் Read more

நிதி மோசடி தொடர்பில் சரண குணவர்த்தன கைது-

விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.. 96 இலட்சம் ரூபா நிதி மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பாராளுமனற உறுப்பினர் சரண குணவர்தான குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யபட்டுள்ளதுடன் அவரை அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு, நேற்றையதினம் சமுகமளிக்குமாறு அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர், நேற்று சமுகமளிக்கவில்லை என்பதுடன் இன்றையதினம் சமூகமளித்திருந்தார்.

ஆதாரங்கள் உறுதியானால் கோட்டாபயவை கைதுசெய்ய வேண்டிவரும்-விக்கிரமபாகு-

எவன்காட் நிறுவன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று கூடிய தேசிய நிறைவேற்று சபையில் பேசப்பட்டதாக சபையின் உறுப்பினர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிறைவேற்று சபை கூட்டத்தில் எவன்காட் நிறுவனம் குறித்து பேசப்பட்டது. அது மிகவும் கடுமையான அமைப்பு. சர்வதேச அளவில் பல செயற்பாடுகளை செய்து நிதி சேகரித்துள்ளது. ஆனால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று சரியாகக் கூறப்படவில்லை. இவ்வாறான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியது எப்படி? எந்த அடிப்படையில் என்றும் இன்னும் தெளிவில்லை. இராணுவத்தினரை எடுத்து இவ்வாறானதொரு இராணுவ அமைப்பை ஏற்படுத்தி சர்வதேச தர செயற்பாடுகளை செய்தது எப்படி என்று தெளிவில்லை. இது குறித்து விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷதான் இதில் குற்றவாளியாக இருப்பார். ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டால் கோட்டாபயவை கைது செய்ய வேண்டிவரும் என்பது குறித்து இங்கு பேசப்பட்டது என விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என அறிவிக்குமாறு திஸ்ஸ கோரிக்கை-

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலர் கபீர் ஹாசிம் ஆகியோரும், செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் தாம் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான கடிதம் தமக்கு கிடைத்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்துதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எனவே, இவ்விடயத்தில் கட்சி எடுத்த தீர்மானத்தை இரத்துச்செய்யுமாறும், தாம் தொடர்ந்தும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் என அறிவிக்குமாறும் தனது மனுவின் ஊடாக திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்வரும் 19ஆம் திகதி மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர்-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்யப்படுவதுடன், தேர்தல் முறைமையும் திருத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் நிமால ;சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது, அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய எட்டு அறிவுறுத்தல்கள் அடங்கிய “மார்ச் 12 பிரடனம்” இன்று பெப்ரல் அமைப்பினால் வெளியிடப்பட்டது. கொழும்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய நிமால் சிறிபால டி சில்வா, தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். அவர் உரையாற்றும்போது, தாம் தற்போதும் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறினார். அதேநேரம் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும்போது, ஒழுக்க விதிகளை பின்பற்றினால், நாடாளுமன்றம் சுத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் பலருக்கு எதிராக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

கிழக்கு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு-

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹமட் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், தாம் உள்ளிட்ட முன்னாள் மாகாண அமைச்சர்களை ஏமாற்றி இருப்பதாக, முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர். இதற்கு, மாகாண முதலமைச்சர் பதவி மாத்திரமே மாற்றப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் இருந்து 3 அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தங்களிடம் உறுதியவழங்கிதாக அவர் கூறியுள்ளார். எனினும் ஆட்சி அமைத்த பின்னர், இந்த இணக்கப்பாட்டை புறந்தள்ளி தங்களை ஏமாற்றி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய மாகாண சபைக்கும் புதிய முதலமைச்சர்-

மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னக்கோனை நியமிக்குமாறு கோரி மாகாண சபையின் 30 ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் சத்திய கடதாசி கையளித்துள்ளனர். சத்திய கடதாசி வழங்கிய உறுப்பினர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் அடங்குவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சத்திய கடதாசிகளை கையளிக்கும்போது மத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் வசந்த அலுவிஹாரேயும் பிரசன்னமாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய மாகாண சபையில் மொத்தமாக 58 உறுப்பினர்கள் உள்ளதுடன் மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க பதவி வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதாக மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல கூறியுள்ளார்.

கூடுதல் அதிகாரப் பகிர்வு குறித்து வடக்கு முதல்வர் கருத்து-

13ம் திருத்தச் சட்டத்திற்கு பதிலாக, மிகச்சிறந்த அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டிய காலம் வந்திருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் இறுதி தீர்வாக அமையாது. இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையிலான அதிகாரப் பகிர்வு திட்டம் ஒன்று குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, இந்த விடயத்தை அவரது கவனத்துக்கு கொண்டுவரவிருப்பதாகவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை-

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மோசடியான முறையில் சொத்துக்களை சேகரித்ததாக அவர்மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. இதன் பொருட்டு அவர் நேற்றைய தினமே அழைக்கப்பட்டிருந்தார். எனினும் சுகவீனம் காரணமாக அவர் சமுகமளித்திருக்கவில்லை. இதற்கு முன்னர் கடந்த 3ம் திகதியும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதேநேரம், பெப்ரவரி மாதம் 25ம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தது.

பொலனறுவை மாவட்டத்தில் நிலஅதிர்வு-

பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், 3 விநாடிகளுக்கு சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிரிதலே, பகமுன, கதுருவெல மற்றும் தியபெதும ஆகிய பிரதேசங்களிலே இந்த அதிர்வு ஏற்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேல் வானிலிருந்து அதிக வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வந்த மர்ம பொருள் காரணமாக, அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறு நில அதிர்வு தொடர்பில் ஆராய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த சிறு நில அதிர்வு நேற்றிரவு 8.31க்கு இடம்பெற்றது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்று இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நியமனம்-

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்றையதினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,