வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்-(படங்கள் இணைப்பு)
வவுனியாவில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்தும் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (11.03.2015)புதன்கிழமை காலை மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடிய வீட்டுத்திட்டம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து ஏ9 வீதி வழியாக ஊர்வலமாக சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வழங்குமாறு கோரியே இவ் மகஜர் வழங்கப்பட்டது. இலங்கையின் வடபகுதிக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநதான், ம.தியாகராசா, இந்திரராசா, சி.சிவமோகன், வவுனியா நகரசபை முன்னாள் உப தலைவரும் புளொட் முக்கியஸ்தர்களுள் ஒருவருமாகிய திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு.பாபு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.